யாப்பதிகாரம்417முத்துவீரியம்

முரண்டொடை

889. முரணத் தொடுப்பது முரண்டொடை யாகும்.

என்பது, அடிதோறுந் தம்முள் மறுதலைப்படத் தொடுப்பது அடி
முரண்டொடையாகும்.

(வ-று.)

இருள்பரந் தன்ன மாநீர் மருங்கி
னிலவுகுவித் தன்ன வெண்மண லொருசிறை
இரும்பி னன்ன கருங்கோட்டுப் புன்னை
பொன்னி னன்ன நுண்டா துறைக்குஞ்
சிறுகுடிப் பரதவர் மடமகள்
பெருமதர் மழைக்கணு முடையவா லணங்கே. (28)

அளபெடைத் தொடை

890. அளபெடுத் தொன்றுவ தளபெடைத் தொடையே.

என்பது, அடிதொறு மளபெடுத்து வருவது அடியளபெடைத் தொடையாகும்.

(வ-று.)

ஓஒதல் வேண்டு மொளிமாழ்குஞ் செய்வினை
யாஅது மென்னு மவர். (குறள்-653) (29)

அந்தாதித் தொடை

891. அந்த முதலாத் தொடுப்பதந் தாதி.

என்பது, இறுதி யெழுத்தேனும் அசையேனும் சீரேனும் அடியேனும் மற்றோரடி
முதலில் வருவது அந்தாதித் தொடையாகும்.

(வ-று.)

உலகுடன் விளக்கு மொளிதிக ழவிர்மதி
மதிநல னளிக்கும் வளங்கெழு முக்குடை
முக்குடை நீழற் பொற்புடை யாதனம்
ஆதனத் திருந்த திருந்தொளி யறிவனை
யறிவுசே ருள்ளமோ டருந்தவம் புரிந்து
துன்னிய மாந்தர தென்ப
பன்னிருஞ் சிறப்பின் விண்மிசை யுலகே. (30)