யாப்பதிகாரம்426முத்துவீரியம்

சுரையாழ வம்மி மிதப்ப வரையனைய
யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப
கானக நாடன் சுனை.

பலவிகற்பு. (7)

சவலை வெண்பா

908. இருகுறள் சவலை யொருவிகற் பாகும்.

என்பது, இரண்டுகுறள் வெண்பாவாக ஒருவிகற்பொடு வருவது சவலை
வெண்பாவாகும்.

(வ-று.)

திருமுடியிற் கண்ணியு மாலையும் பாம்பு
திருமார்பி லாரமும் பாம்பு
திருவரையிற் கட்டிய கச்சையும் பாம்பு
பொருபுயத்திற் கங்கணமும் பாம்பு. (சிதம்பரச் செய்யுட் கோவை) (8)

பஃறொடை வெண்பா

909. பாதம் பலவரிற் பஃறொடை யாகும்.

என்பது, நான்கடிக்குமேல் ஏழடியிறுதியாக வருவது பஃறொடை வெண்பாவாகும்.

(வ-று.)

சேற்றுக்கா னீலஞ் செருவென்ற வேல்வேந்தன்
கூற்றுறழ் மொய்ம்பிற் பகழி பொருகயல்
தோற்றந் தொழில்வடிவு தம்முற் றடுமாறும்
வேற்றுமை யின்றியே யொத்தன மாவேடர்
ஆற்றுக்கா லாட்டியர் கண். (9)

கலிவெண்பா

910. அடிவரை யின்றித் தனிச்சொற் பெற்றும்
     பெறாதும் வருவது கலிவெண் பாவே.

என்பது, எண்ணிறந்த வடிகளையுடைத்தாய்த் தனிச்சொற் பெற்றும் பெறாதும் வருவது
கலிவெண்பாவாகும்.