யாப்பதிகாரம்457முத்துவீரியம்

மெல்லிசை வண்ணம்

984. மெல்லின மிகுவன மெல்லிசை யாகும்.

என்பது மெல்லெழுத்து மிக்குவருவன மெல்லிசை வண்ணமாகும். (23)

இடையிசை வண்ணம்

985. இடையின மிகுவன விடையிசை யெனலே.

என்பது, இடையெழுத்து மிக்குவருவன இடையிசை வண்ணமாகும். (24)

ஒழுகிசை வண்ணம்

986. விரவிமூ வினமு மிகுவன வொழுகிசை.

என்பது, வல்லினமும் மெல்லினமும் இடையினமும் மிக்கு வருவன ஒழுகிசை
வண்ணமாகும். (25)

எண்ணு வண்ணம்

987. எண்ணி வருவன வெண்ணெனப் படுமே.

என்பது, பலவற்றையு மெண்ணிவருவன எண்ணு வண்ணமாகும். (26)

உருட்டு வண்ணம்

988. உருட்டா மராகத் தொடுவரு வனவே.

என்பது, அராகத்தொடு வருவன உருட்டு வண்ணமாகும். (27)

முடுகு வண்ணம்

989. அராகமாய் வருகுவ தன்றி யடிமுதல்
     ஈறுந் தோன்றா மற்றொடர்ந் தெழும்பிய
     வடியான் வருவன முடுகா கும்மே.

என்பது, அராகமாய் வருவதன்றி யடிமுத லீறுந் தோன்றாமற் றொடர்ந்து
நீண்டவடியால் வருவன முடுகுவண்ணம். (28)