யாப்பதிகாரம்460முத்துவீரியம்

நெடுஞ்சீர் வண்ணம்

1001. நெட்டெழுத் தியைந்து வருவன நெடுஞ்சீர்
     ஆகு மென்மனா ரறிந்திசி னோரே.

என்பது, நெட்டெழுத்தியைந்து வருவன நெடுஞ்சீர் வண்ணமாகும். (40)

சித்திர வண்ணம்

1002. நெடிலுங் குறிலு நீங்காது வருவன
      சித்திர மென்மனார் தெளிந்திசி னோரே.

என்பது, நெட்டெழுத்தும், குற்றெழுத்தும், விரவிவருவன சித்திர வண்ணமாகும். (41)

பத்துவகைக் குற்றங்கள்

1003. யாப்பினு ளெழுத்துச் சொற்பொருள் யாப்பணிக்
      குற்றமு மைவகை குறிக்குமா னந்தமும்
      வாரா துரைப்பது வழுவில வாகும்.

என்பது, செய்யுளில், எழுத்துக் குற்றமும், சொற்குற்றமும், பொருட் குற்றமும்,
யாப்புக் குற்றமும், அலங்காரக் குற்றமும், ஐவகை யானந்தமும் வாராமற் பாடுவது
குற்றமிலவாம். (42)

எழுத்துக் குற்றம்

1004. எழுத்துக் குற்ற மெழுத்திலக் கணத்தில்
      வழுத்திய முறையின் மாறுபட்டு
      வருவ தாமென வழுத்தப் படுமே.

என்பது, எழுத்துக் குற்றமாவது, எழுத்திலக்கணத்திற் கூறிய முறையின் மாறுபட்டு
வருவதாகும். (43)

ஏனைய குற்றம்

1005. ஏனைய குற்றமு மிவற்றோ ரற்றே.

என்பது, சொற்பொருள் யாப்பணிக் குற்றமும், அவ்வவ்விலக்கணத்தின் மாறுபட்டு
வருவனவாம். (44)