யாப்பதிகாரம்488முத்துவீரியம்

புறநிலை

1098. நீவணங் கொருவ னினைப்பாது காப்ப
      நின்னுடைய வழிவழி நீளுவ தாக
      எனவியம் புவது புறநிலை யென்ப.

என்பது, நீ வணங்குந் தெய்வம் நின்னைப் பாதுகாப்ப, நின் வழி வழி
மிகுவதாகவெனக் கூறுவது புற நிலையாகும். (137)

கடைநிலை

1099. பெரியோர் சேணிடை வருதலாற் பிறந்த
      வருத்தந் தீர வாயில்காக் கின்றோற்
      கென்வர வினையிறைக் கியம்புதி நீயெனக்
      கடைக்கணின் றுரைப்பது கடைநிலை யாகும்.

என்பது, சான்றோர் தூரத்தில் வருதலால் பிறந்த வருத்தந்தீர, வாயில்
காக்கின்றவனுக்கு, என்வரவைத் தலைவற் கிசையெனக் கடைக்கணின்று கூறுவது
கடைநிலையாகும். (138)

கையறுநிலை

1100. கணவனொடு மனைவி கழிந்துழி யவர்கட்
     பட்ட அழிவுப் பாக்கிய மெல்லாம்
     பிறருக் கெடுத்தறி வுறுத்தித் தாமும்
     இறந்துபடா தொழிந்த வாயத் தாரும்
     வேண்டுவன பெறும் விறலியர் குழாமுந்
     தனிப்பட ருழந்த செயலறு நிலையை
     நிகழ்த்துவது கையறு நிலையா கும்மே.

என்பது, கணவனொடு மனைவி கழிந்துழி, அவர்கட்பட்ட அழிவுப்
பொருளெல்லாம் பிறர்க் கறிவுறுத்தித் தாமிறந்து படாதொழிந்த வாயத்தாரும்,
பரிசில்பெறும் விறலியரும் தனிப் படருழந்து செயலறு நிலையைக் கூறுவது கையறு
நிலையாகும். (139)

தசாங்கப் பத்து

1101. தலைவன் படைத்த தசாங்க நேரிசை
     வெண்பா வாக வீரைந்து விளம்புதல்
     தசாங்கப் பத்தெனச் சாற்றப் படுமே.