அணியதிகாரம்518முத்துவீரியம்

பொன்னை மயக்கும் பொறிசுணங்கி னார்முகமே
என்னை மயக்கு மிது. (தண்டி-மேற்) (14)

விபரீதவுவமை

1168. புகலரு முவமையைப் பொருள தாக்கிப்
      பொருளை யுவமைப் பொருள தாக்கி
      உரைப்பது விபரீத வுவமை யாகும்.

என்பது, உவமையைப் பொருளாக்கிப் பொருளை யுவமையாக்கிக் கூறல்,
விபரீதவுவமை.

(வ-று.)

திருமுகம் போன்மலருஞ் செய்ய கமலங்
கருநெடுங்கண் போலுங் கயல்க-ளரிவை
இயல்போலு மஞ்ஞை யிடைபோலுங் கொம்பர்
மயல்போலும் யாம்போம் வழி. (தண்டி-மேற்) (15)

வேட்கையுவமை

1169. பொருளை யின்னது போலுமென் றறைய
      வேட்கின்ற தென்னுள மென்பது வேட்கை.

என்பது, பொருளையின்னது போலக்கூற, எனது மனம் இச்சிக்கின்ற தெனல்
வேட்கையுவமை.

(வ-று.)

நன்றுதீ தென்றுணரா வென்னுடைய நன்னெஞ்சம்
பொன்றதைந்த பொற்சுணங்கிற் பூங்கொடியே - மன்றன்
மடுத்ததைந்த தாமரைநின் வாண்முகத்துக் கொப்பென்
றெடுத்தியம்ப வேண்டுகின்ற தின்று. (தண்டி-மேற்) (16)

பலபொருளுவமை

1170. ஒருபொருட் குப்பல வுவமமுறல் பலபொருள்
      உவமை யென்மனா ருணர்ந்திசி னோரே.

என்பது, ஒருபொருளுக்குப பலவுவமை வரல் பலபொருளுவமை.