அணியதிகாரம்524முத்துவீரியம்

மின்னுளதான் மேக மிசையுளதான் மற்றதுவும்
என்னுளதா நண்பா வினி. (தண்டி-மேற்) (31)

ஏகதேச வுருவகம்

1185. ஒருபொரு ளுருவகஞ் செய்துமற் றொருபொருள்
      உருவகஞ் செய்யா துரைத்துப் போதரல்
      ஏகதே சப்பொரு ளென்மனார் புலவர்.

என்பது, ஒருபொருளை யுருவகஞ்செய்து வேறாகிய ஒருபொருளை யுருவகஞ்
செய்யாது வரல் ஏகதேச வுருவகம்.

(வ-று.)

உரனென்னுந் தோட்டியா னோரைந்துங் காப்பான்
வரனென்னும் வைப்புக்கோர் வித்து. (குறள்-24) (32)

பலபடப் புனைவணி

1186. பலரு மொருபொரு ளிற்பல தருமங்
      களினாற் பலபொருள் களையெடுத் துரைத்தல்
      பலபடப் புனைவெனப் பகரப் படுமே.

என்பது, ஒருபொருளிற் பலரும் பலவறங்களால் பல பொருள்களை யெடுத்துக்
கூறல் பலபடப்புனைவணி.

(வ-று.)

ஆரணங் காணென்ப ரந்தணர் யோகிய ராகமத்தின்
காரணங் காணென்பர் காமுகர் காமநன் னூலதென்பர்
ஏரணங் காணென்ப ரெண்ண ரெழுத்தென்ப ரின்புலவோர்
சீரணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே. 

(திருக்கோவையாரைப் பற்றியது) (33)

மயக்கவணி

1187. ஒப்புமை யாலொரு பொருளை மற்றொரு
      பொருள தாகப் புனைவது மயக்க
      அணியா மென்மனா ரறிந்திசி னோரே.

என்பது, ஒப்பினாலொருபொருளை வேறொரு பொருளாகக் காணல் மயக்கவணி.