அணியதிகாரம்525முத்துவீரியம்

(வ-று.)

மழைக்கண் மங்கையர் பயிறர மரகத மணியின்
இழைத்த செய்குன்றிற் பைங்கதிர் பொன்னிலத் தெய்தக்
குழைத்த வைந்தரு நீழலிற் குலவுமா னினங்கள்
தழைத்த புல்லென விரைவொடு தனித்தனி கறிக்கும். (34)

ஐயவணி

1188. ஒப்புமை யாலொரு பொருளை நோக்குபு
     இதுவோ வதுவோ வெனச்சந் தேகப்
     படுவதை யப்பொரு ளாம்பகர் தரினே.

என்பது, ஒப்பினாலொரு பொருளைப் பார்த்து, இதுவோ வதுவோவெனச்
சந்தேகப்படல் ஐயவணி.

(வ-று.)

அணங்குகொ லாய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொன் மாலுமென் னெஞ்சு. (குறள் 1081) (35)

எடுத்துக் காட்டுவமை

1189. ஒருபொருட் கொருபொரு ளுவமையாக
      எடுத்துக் காட்டுவ தெடுத்துக் காட்டுவமை
      ஆகு மென்மனா ரறிந்திசி னோரே.

என்பது, ஒரு பொருளுக்கு வேறொரு பொருளை உவமையாக வெடுத்துக் காட்டல்
எடுத்துக் காட்டுவமை.

(வ-று.)

அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு. (குறள் 1) (36)

கூடாமையணி

1190. பேசரு மொருகா ரியம்பிறப் பதனை
     அருமை யுடையன வாகக் கூறல்
     கூடாமை யென்மனார் குறிப்புணர்ந் தோரே.

என்பது, ஒரு காரியம் பிறப்பதை யருமையாகக் கூறல் கூடாமையணி.