அணியதிகாரம்527முத்துவீரியம்

(வ-று.)

இந்தத் தரளவட மேந்திழைநின் கொங்கைகளிற்
சந்தமுறச் சேர்த றகும். (40)

வியப்பணி

1194. அரிதொரு பயனைக் கருதிய தற்குப்
     பகையா முயற்சி பணல்வியப் பாகும்.

என்பது, அரிதாகிய வொரு பிரயோசனத்தை யெண்ணி அதனுக்குப் பகையாகிய
முயற்சி செய்தல் வியப்பணி.

(வ-று.)

ஓதுந் திறத்தா லுயர்ந்தோர்க டாழ்குவரெப்
போது முயர்வெய்தற் பொருட்டு. (41)

பெருமையணி

1195. ஆதா ரத்தினு மாதே யத்தைப்
     பெரிதா யுரைப்பது பெருமை யாகும்.

என்பது, ஆதாரப் பொருளினும் ஆதேயப் பொருளைப் பெரிதாகக் கூறல் பெருமை.

(வ-று.)

உலக முழுதடங்கு மாவிசும்பி லுன்றன்
அலகில் குணமடங்கா வாம். (42)

சிறுமையணி

1196. ஆதே யத்தினு மாதா ரத்தைச்
     சிறுமை யாகச் செப்புதல் சிறுமை.

என்பது, ஆதேயப் பொருளினும் ஆதாரப் பொருளைச் சிறுமையாகக் கூறல்
சிறுமையணி.

(வ-று.)

விரலாழி கைவளையாய் விட்டதினி யார்த்து
வரலாழிக் கென்செயுமெம் மாது.

ஆதாரம்-பெருமை. ஆதேயம் - சிறுமை. (43)