எழுத்ததிகாரம்76முத்துவீரியம்

(இ-ள்.) நாழியென்னு முகத்தலளவைப் பெயருக்கு முன் பதக்கென்னு
முகத்தலளவைப் பெயர் வரின், நாழியீற்றுயிர் மெய்கெட வல்லொற்றாகிய டகரமெய்
தோன்றும்.

(வ-று.) நாழி + உரி = நாடுரி எனவரும்.

(வி-ரை.)

‘‘உரிவரு காலை நாழிக் கிளவி
இறுதி இகர மெய்யொடுங் கெடுமே
டகார ஒற்றும் ஆவயி னான’’ (உயிர்ம - 438)

என்பது தொல்காப்பியம். (103)

பனி என்னும் பெயர்

263. இன்னு மத்தும் பனியொடு சிவணும்.

(இ-ள்.) பனியென்னுங் காலப்பெயர் இன்சாரியையும் அத்துச்சாரியையும் பெறுமென்க.

(வ-று.) பனியிற்கொண்டான். பனியத்துக்கொண்டான், (104)

வளி என்னும் பெயர்

264. வளிப்பெயர்க் கிளவியு மவற்றோ ரற்றே.

(இ-ள்.) வளியென்னும் பூதப்பெயர்க்கிளவியும் இன்சாரியையும் அத்துச்சாரியையும்
பெறுமெனவறிக.

(வ-று.) வளியிற்கொண்டான், வளியத்துக்கொண்டான். (105)

உதிமரக்கிளவி

265. உதியெனு மரமெலி மிகுமென மொழிப.

(இ-ள்.) உதியென்னு மரப்பெயர்க்கிளவி மெல்லெழுத்து மிக்கு முடியும்.

(வ-று.) உதி + கோடு = உதிங்கோடு. (106)

புளிமரக்கிளவி

266. அம்முச் சாரியை யடையு மரப்புளி.

(இ-ள்.) புளியென்னும் மரப்பெயர்க்கிளவி யம்முச்சாரியை பெறுமென்க.