முக்கூடற் பள்ளு மூலமும் உரையும் காப்பு கொச்சகக் கலிப்பா பூமேவு நீலவெற்பிற் பொன்னிறமு முண்டெனப்பூ மாமேவு முக்கூடல் மாலழகர் பள்ளிசைக்கே பாமேவு சொற்புரப்பார் பாவலரென் றெட்டெழுத்து நாமேவு பத்தர்பத்து நாவலரும் காப்பாமே. (இதன்பொருள். ) பூமேவு நீல வெற்பில்-செந்தாமரை மலர்கள் பொருந்தியுள்ள கருநீல மலையின் நடுவில், பொன் நிறமும் உண்டு என-பொன்னின் நிறமும் உண்டு என்று சொல்லும்படியாக, பூமாமேவு-செந்தாமரை மலரிலிருக்குந் திருமகள் வீற்றிருக்கின்ற மார்பினையுடைய, முக்கூடல் மாலழகர்-திருமுக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற திருமாலாகிய அழகரது, பள் இசைக்கு-பள்ளு நூலாகிய இசை நாடகத் தமிழைப் பாடுதற்கு, பாமேவு சொல் புரப்பார் பாவலர் என்று-பாட்டுக்குப் பொருந்திய சொற்களை ஆட்சி செய்து புரக்கும் பாவலரும், எட்டு எழுத்து நாமேவு பத்தர் பத்து நாவலரும்-திருமாலின் திருமந்திர எழுத்தாகிய எட்டு எழுத்தினையும் நாவின்கண் நீங்காது ஓதுகின்ற பத்தரும் நாவலருமாகிய பத்து ஆழ்வார்களும், காப்பாம்-துணையாம்; (என்றவாறு. ) |