பக்கம் எண் :

2 முக்கூடற் பள்ளு

(விளக்கம்) தாமரை மலர்கள் பூத்த நீல மலையின் நடுவில் பொன்னிறம் அமைந்தாற் போன்று, கண், கை, கால், வாய் இவை தாமரை மலராக, திருமேனி மலையாக, மார்பில் இருக்குந் திருமகள் பொன்னிறமாகத் திருமால் விளங்கினர் என்பது.

"கருமாணிக்க மலைமேல்
      மணித்தடந் தாமரைக் காடுகள் போல்
திருமார்பு கண், கை
      வாய் செய்ய பிரான்"

என்பதுங் காண்க.

அழகர்-முக்கூடலிலுள்ள திருமால் பெயர். பாவலர் என்று-என்று என்பது உம்மைப் பொருள் தந்து நின்றது. பாவலரும் என்றவாறு. பத்தராகிய பத்து நாவலரும் என்க.

முக்கூடல்-தண் பொருநை யாறும், சிற்றாறும், கோதண்டராம நதியும் ஆகிய மூன்றும் கூடும் இடத்திலமைந்த முக்கூடல் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது. இவ்விடத்தில் அமைந்த ஊருக்கு முக்கூடல் என்று பெயர். சீவலப்பேரி என்று இப்போது பெயர் வழங்குகின்றது.

பொன்னாகிய திருமகளை நிறமாகிய மார்பின்கட்கொண்டு நீலமலை போன்ற திருவுருவத்துடன் இலங்குந் திருமால் “பூமேவு நீலவெற்பில் பொன்னிறமும் உண்டெனப் பூமா மேவு மாலழக” ராக இலங்கினர் என்பது.

பொன்-திருமகள், நிறம்-மார்பு. மால்-அன்பின் மயக்கம். திருமகளை மார்பில் உடையான் என்பது அருள் நிரம்பிய நெஞ்சுடையான் என்றவாறு. எனவே, அருளுடையானைப் பற்றிப் பாடுதற்கு அவனிடம் வேண்டுதல் வேண்டா. அவன்றானே அருளுவனாதலின் அது செய்திலர் என்க.

இனி, இவ்வாறன்றி, “மாலழகரானவர், யாம் பாடும் பள்ளிசைக்குப் பாவிற்குப் பொருந்திய சொல்வளம் தந்து பரப்பர்; அதுவுமன்றிப் பாவலரும் நாவலராகிய பத்து ஆழ்வார்களும், எட்டெழுத்தும் நாவின் நீங்காராகிய பத்தருமாகிய மூன்று திருக்கூட்டத்தாரும் காப்பாம்” எனினும் அமையும். இதற்குப் “பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும், ஆயிரத்தின்பாலே பட்ட இவைபத்தும், வல்லார்க்கில்லை பரிவதே,” என்ற திருவாய்மொழிப் பகுதிக்கு உரை கொண்டாற்போற் கொள்க.