| திருவாய் மொழிகல்லாரை இருகால்மா டுகளாக்கித் தீத்தீயென் றுழக்கொலால் சாத்துவே னாண்டே. |
(இ - ள்.) ஒப்பற்ற செந்தாமரைமலர் போன்ற அழகரின் திருவடிகளை நினையாதவர் மனத்தை முரம்பு நிலத்தில் உழுவதற்குக் காணப்படுகின்ற தரிசு நிலமென்று கருதிக் கொழுவினைப் பாய்ச்சி உழுவேன்; அரிய நூல்களிலுள்ள மதிப்பிற்கு உரிய இலக்கிய உண்மையை எங்கள் பெரிய நம்பியைக் கேட்டுத் தெரிந்துகொள்ளாத தீயோருடைய செவிகளைத் தரிசு நிலத்திலுள்ள புற்றுகளை யான் வெட்டுவது போலவே மண்வெட்டிக்கொட்டால் வெட்டுவேன்; பெருமாளுடைய நூற்றெட்டுத் திருப்பதிகளையும், மனத்தில் மருவி வலஞ்சுற்றி வராதவருடைய பேய்த்தன்மை வாய்ந்த கால்களை வடம்பூட்டி ஏர்க்காலிற் சேர்ப்பேன்; திருவாய்மொழியைப் படியாதவரை இரண்டு கால் மாடுகளாகக்கொண்டு தீத்தீ யென்று அதட்டித் தார்க் கோலால் சாத்துவேன் நயினாரே என்று கூறுகின்றான். (வி - ம். ) ஒருபோது-ஒப்பற்ற தாமரைப் பூ; ஒரு வேளையாவது எனினுமாம். வன்பால்-முரம்பு நிலம் வம்பில், அன்பில் என்றும் பாடங்கள் உண்டு. மென்பால் என்பது நல்ல மருத நிலம். வன்பால் தரிசு என்று கூட்டி வறண்ட புன்செய் நிலத் தரிசு என்று பொருள் கொள்க. எண்ணெழுத்துண்மை என்பதற்கு, திருமாலடியார் ஓதும் எட்டெழுத்தின் உண்மை எனினுமாம். எண் எழுத்து-மதிப்பிற்குரிய இலக்கியம். “எழுத்தறியத் தீரும் இழி தகைமை” என்பது காண்க. கேளாச் செவியை வெட்டுவேன் என்றான். கேளா என்பதே சிறந்த பாடம். தொழாத் துட்டர் செவி என்றும் பாடம் உண்டு. “தொழா” என்ற பாடம் சிறப்புடையதன்று. வலஞ் செய்யாரை என்றும், பேய்க்காலில் என்றும், உழக்கோல் கொண்டு என்றும் ‘சாற்றுவேன்’ என்றும் வேறு பாடங்களும் உள. ‘வலஞ் செய்யாக் கால்களை மேழிகளாகக் கொண்டு ஏர்க் காலிற் சேர்ப்பேன்’ என்றான். இதனால், அழகர்மேற் பற்றில்லாத மக்களை உயர்ந்த நன்மக்களாக நான் மதியேன் என்பது அவன் கருத்தாகும். (11) |