தாவறுசொற் கேவல முறினும் சார்புபொருட் சோர்வுகள் வரினும் தாளவிதத் தேழணி கெடினும் -தள்ளார் புலவோர் தேவர்முடிப் பூவடி பிரசம் சீலமணிக் கோலணி இலகும் சேனைமுதற் கோனைமு னிடிலென் -செய்வார் பிறரே. (இ - ள்.) பூவலயக் காவலன் எனவும்-இந் நிலவுலகத்தின் காத்தற் கடவுள் என்றும், பூவை நிறச் சேவையன் எனவும்-காயாம் பூவின் நிறத்தைப் போன்றவனாகக் காட்சி கொடுப்பவன் என்றும், போதலும் எட்டாதவன் எனவும்-தன் உந்தித் தாமரைப்போதில் இருப்போனாகிய பிரமதேவனாலும் அறியப்படாதவன் என்றும், பொய்யா மறைதேர் பாவலனுக்கு-பொய்த்தலில்லாத மறைநூற் பொருளை உணர்ந்த தமிழ்ப் பாவலனாகிய நம்மாழ்வாருக்கு, ஆவலன் எனவும்-விருப்பம் உடையவன் என்றும், பார் அறிய-இந்த உலகத்தினர் எல்லோரும் உணர, தார் அணி செயும்-பாமாலையாகிய தாரினை அவனுக்கு அணியாகச் செய்யும், என் பாடலின் முக்கூடலின் அழகன்-என்னுடைய பாடலினையுடைய முக்கூடலிலுள்ள அழகரின், பள் ஏசலிலே-பள்ளேசல் என்னும் இந்த முத்தமிழ் நூலிலே, சொல் தா அறு கேவலம் உறினும்-சொற்கள் வலிமையற்றுப் பொருந்தாநிலையை யடைந்தாலும், சார்பு பொருள் சோர்வுகள் வரினும்-பொருந்திய பொருள்களில் மெலிவு காணப்படினும், புலவோர் தள்ளார்-புலவர் இகழமாட்டார், தேவர் முடி பூஅடி பிரசம்-கோவிலில் வந்து வணங்கும் கூட்டத்தை விலக்கும்பொருட்டு அடிக்கும்போது தேவர்களின் முடியின் மேலுள்ள பூவில் அடித்ததனால் தோய்ந்த தேனானது, சீலமணி கோலணி இலகும்-ஒழுங்கான மணிக்கற்கள் பதித்த கோலில் அழகாக விளங்கிக் கொண்டிருக்கும், சேனை முதல் கோனை- |