பக்கம் எண் :

164பாயிர விருத்தி

விளங்காயும் எருமையும் யாடும் தோணியும் என உவமத்தை நான்கு ஆக்கினார்; அது பொருந்தாது. என்னை? மலை முதலாய நான்கு உவமத்தான் ஆசிரியன் தன்மை கூறி, அவற்றின் மறுதலையாக நான்கு உவமம் அல்லாதாற்குக் கூறியாங்கு, மாணாக்கன் தன்மையை அன்னம் முதலாய ஆறு உவமத்தால் கூறிய முதல் நூல் ஆசிரியற்கு அவற்றின் மறுதலையாக மாணாக்கன் அல்லாதாற்கு மாறு உவமம் கூறலே கருத்தாகலானும், குரங்கெறிகாய் பிறவற்றை நீக்கி விளங்காய் என ஒரு காயினைச் சுட்டற்குச் சிறப்பியல்பு வேண்டும் ஆகலானும், அங்ஙனம் சிறப்பியல்பே அன்றிக் காயின் பொது இயல்பாவது கூறாமல் கல்லால் எறிந்து கருதுபயன் கோடல் என்றமையான் அத்தன்மை எக்காய்க்காயினும் ஒப்புமைக் குணம் ஆகாமல் காய் கொள்வோர் குணமாகவே முடிதலின், விளங்காயை உவமைகூறி அதன் தன்மையை ஒப்புமைக் குணம் ஆக்காமல் அக்காயினைக் கொள்வார் தன்மையை ஒப்புமைக் குணம் ஆக்கல் கூடாமையானும் என்பது.

இனி அன்னம் முதலாய அப்பன்னிரண்டு உவமமும் மலை முதலாய அவ்எட்டே போலத் தன்மை சுட்டாமையின் முன் உரைத்தாங்கு உரைக்கப்படும்.

இனி உவமத்திற்கும் பொருட்கும் உரிய பொதுத்தன்மை, கொள்வோன் தன்மை பலவற்றுக்குப் பொது ஆகலின் பொது இயல்பு எனவும் கொள்வோன் தன்மையுள் கோடல் வினை ஒன்றற்கே உரிமை ஆகலின் சிறப்பியல்பு எனவும் இரு வகைப்படும்.

அவற்றுள் பொதுஇயல்பு என்னை எனின்; ஆத்திரையன் பேராசிரியன் ‘முன்னர்க் கூறிய எண்வகை உறுப்பினுள் ஏற்பன உடையராகி’ என்றான் ஆகலின், கல்வியும் கல்வியான் எய்தற்பாலவாய பிறவும் அன்றி ஏனைய குடிப்பிறப்பு முதலாயினவே மாணாக்கர்க்கு ஏற்பன ஆகலான் அன்னவாம் என்பது.

இனிக் குடிப்பிறப்பின் வகை எட்டனுள் அந்தணர் இயல்பு முதலாய பிறவும், குடிப்பிறப்பின் பொதுஇயல்புள் கொடையும் நாணும், கற்றபின்னரே நிரம்பற்பால ஆகலின் அவை ஒழிந்த ஈகை முதலாய ஆறு குணமும் மாணாக்கர்க்கு ஏற்பனவாம். என்னை? 1நட்புந் தயையுங் கொடையும் பிறவிக்குணம் எனவும் 2நலஞ்சுடு


1ஓளவையார் பாட்டு

2திருக்குறள், 1019