பிறிதொன்று விரவப்பெற்றும், அவற்றிடையே சோதிடம் காந்தருவம் கூத்து வரி முதலாயின விரவப் பெற்றும், தனித்தனி நிற்கும்முறை இன்றிக் கலந்த முறையால் பரந்துபடக் கிடந்தமை பெறப்பட்டது. எண்ணி எனவே முதல் நூலும் வழிநூலுமாகிய முந்துநூல் இருக்கத் தாமும் வழிநூல் செய்யப்புக்கது தலையாய அறிவினோரையன்றி, ஏனோரை நோக்கின் இன்றியமையாமை ஆகும் என்பதூஉம், அதுவும் தவஒழுக்கம் போல்வதோர் பேரறச் செய்கையாம் என்பதூஉம், நூல்செய்யுங்கால் சில்வாழ்நாள் பல்பிணிச் சிற்றறிவினோர்க்கு எத்துணை எளிதின் உணர்த்தல் கூடுவதோ அத்துணை எளிதின் விளங்குமாறு அம்முதல் நூற்கண் உள்ள எழுத்து சொல் பொருள் மூன்றும் குறைவுபடக் கூறாது தொகுத்துக் கூறலே தக்கது என்பதூஉம், அவ்இயற்றமிழோடு அதன்ஒழிபாக வேண்டப்படும் ஏனை இலக்கணமும் கூறல் வேண்டும் என்பதூஉம், பிறவும் பல்கால் ஆராய்ந்தமை பெறப்பட்டது. புலம் தொகுத்தற்குக் காரணம் முறைப்பட எண்ணினமையும், எண்ணற்குக் காரணம் முந்துநூல் கண்டமையும், கண்டதற்குக் காரணம் நாடிச் சிவணிய நிலமும் ஆகலின், அம்முறையானே நாடிச் சிவணிய நிலத்தொடு கண்டு எண்ணித் தொகுத்தோன் என்றார். போக்கறு பனுவல் என்றது, நூற்கு ஆகா என்ற பத்துக் குற்றமும் இன்றி முப்பத்திருவகை உத்தியொடு புணர்ந்த நூலை. போக்கறு நிலம் என்றது, நாட்டிற்கு ஆகா என்ற வளமின்மை முதலாய குற்றங்களற்ற நிலத்தை. போக்கறு திரு என்றது அறநிலை அறத்தான் வந்த திருவும், மறநிலை அறத்தான் வந்த திருவும், பனுவல் ஆராய்ச்சியான் வந்த கல்வித் திருவும், ஞானத் திருவும், நிலம் தருகின்ற கொடைத் திருவும், அவை எல்லாவற்றானும் எய்திய புகழ்த் திருவும் எனக் குற்றமற்ற பல்வகைத் திருவையும். போக்கறு பாண்டியன் எனவே அவன் பேரறிவு உடையனாகலின், மனத்தான் வரும் குற்றமும் வாக்கான் வரும் குற்றமும் காயத்தான் வரும் குற்றமும் அற்ற செங்கோல் அரசன் என்பது பெறப்பட்டது. போக்கறும் அவை என்றது, அவ் அவையோரும் அவனை ஒப்பாராய்க் குற்றமற்ற பேரறிவினராம் என விளக்கிநின்றது. பனுவற் பாண்டியன் எனவே தலைச்சங்கம் இரீஇய பாண்டியர் எண்பத்தொன்பதின்மருள் அவன் கவி அரங்கேறிய பாண்டியன் |