என்பது பெறப்பட்டது. அவன் கவி அரங்கேறிய பாண்டியர் எழுவருள் ஒருவன் என்பதூஉம், அவனே இந்நூலைச் செய்வித்தோனுமாவான் என்பதூஉம், அவ்வாறு தலைச்சங்கத்து இறுதியில் செய்யப்படினும் அத்தலைச்சங்கத்துப் புலவர் இந்நூல்கொண்டு ஒன்று அறிதல் வேண்டும் என்னும் தன்மையரல்லர் ஆகலான் இந்நூலை வழங்காது முந்துநூலே வழங்கினார் என்பதூஉம், இடைச்சங்கப் புலவர் எல்லாம் இவ்வாசிரியர்க்குப் பிற்காலத்தார் ஆகலின் அம்முந்து நூலொடு இந்நூலையும் பயின்று வந்தார் என்பதூஉம், களவியல் உரையானும் சிலப்பதிகார உரையானும் விளங்கும். இனிச் சங்கமிரீஇய பாண்டியர் வரலாற்றினைக் களவியல் உரைப் பாயிரத்துள் கொண்டாங்கு உரைத்தவாறு கூறுதும். “தலைச்சங்கம் இடைச்சங்கம் கடைச்சங்கம் என மூன்று சங்கம் இரீஇயினார் பாண்டியர்கள். அவருள் தலைச்சங்கம் இருந்தார் அகத்தியனாரும், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளும், குன்றெறிந்த முருகவேளும், முரஞ்சியூர் முடிநாகராயரும், நிதியின் கிழவனும் என இத்தொடக்கத்தார் ஐஞ்ஞூற்று நாற்பத்தொன்பதின்மர் என்பது. அவர் உள்ளிட்டு நாலாயிரத்து நான்னூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினார் என்பது. அவர்களால் பாடப்பட்டன எத்துணையோ, பரிபாடலும், முதுநாரையும், முதுகுருகும், களரியாவிரையும் என இத்தொடக்கத்தன. அவர் நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு சங்கமிருந்தார் என்பது. அவர்களைச் சங்கமிரீஇயினார் காய்சின வழுதி முதலாகக் கடுங்கோன் ஈறாக எண்பத்தொன்பதின்மர் என்ப. அவருள் கவியரங்கேறினார் எழுவர் பாண்டியர் என்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்து கடல் கொள்ளப்பட்ட மதுரை என்ப. அவர்க்கு நூல் அகத்தியம் என்ப.’’ எனத் தலைச்சங்க வரலாறு காணப்படலின், ஒரு தலைமுறைக்கு ஏறக் குறைய ஐம்பதிற்றி யாண்டு என்னும் கணக்கின் எண்பத்தொன்பது தலைமுறை கழிந்தன என்பதூஉம், முதன்முதற் சங்கமிரீஇய காய்சினவழுதி காலம் முதல் ஒரு தலைமுறைக்குப் புலவர் அறுவராகப் பாண்டியர்க்குப் பக்கத் துணையென ஓராசிரியர் என்றும் இருந்து வந்தமையானும், சில தலைமுறையின் அறுவர்க்கு மேலும் பக்கத்துணை ஆயினமை யானும், எண்பத்தொன்பது தலைமுறையினும் சங்கமிருந்தார் ஐஞ்ஞூற்று நாற்பத்தொன்பதின்மர் ஆயினர் என்பதூஉம், பக்கத் துணையாக என்றும் இருந்து தமிழாராயும் புலவரே அன்றி |