சொல்லப்படுவன ஒரு புடையான் ஒப்புமையும் வேற்றுமையும் உடைமையான் இரண்டாதல் வேண்டும். இவை எழுத்தானும் பொருளானும் வேறுபாடின்மையாகிய ஒரு சொல் இலக்கணமுடைமையான் இரண்டு சொல் எனப்படா. அதனான் ஒத்தல் யாண்டையது? ஒரு சொல்லேயாம் என்பது. 2ஒரு சொல்லாயினும் ஆரியமும் தமிழுமாகிய இடவேற்றுமையான் வேறாயினவெனின், அவ்வாறாயின் வழக்குஞ் செய்யுளுமாகிய இடவேற்றுமையாற் சோறு கூழ் என்னும் தொடக்கத்தனவும் இரண்டு சொல்லாவான் செல்லும்; அதனான் இடவேற்றுமையுடைய வேனும் ஒரு சொல் இலக்கணம் உடைமையான் ஒரு சொல்லேயாம். ஒரு சொல்லாயவழித் தமிழ்ச்சொல் வடபாடைக்கட் செல்லாமையானும், வடசொல் எல்லாத் தேயத்துக்கும் பொதுவாகலானும் இவை வடசொல்லாய் ஈண்டு வழங்கப்பட்டன வெனல் வேண்டும்; அதனான் (அது போலியுரை யென்க. அல்லதூஉம் அவை தமிழ்ச் சொல்லாயின் ‘வடவெழுத்தொரீஇ, யென்றல் பொருந்தாமையானும் வடசொல்லாதலறிக. தெய் வடசொற் கிளவியாமாறுணர்த்துதல் நுதலிற்று. இ-ள் : வடசொல்லாகிய சொல்லாவது வடமொழிக்கேயுரியவாகிய எழுத்தை நீக்கித் தமிழ் மொழிக்குரிய எழுத்தோடு புணர்ந்த சொல்லாகும், எ-று. எல்லா நாட்டிற்கும் பொதுவாயினும் வடநாட்டில் பயில வழங்குதலின் வடசொல்லாயிற்று. வடசொல் என்றதனால் தேய வழக்காகிய பாகதச் சொல்லாகிவந்தனவும் கொள்க. வடமொழியாவன : வாரி, மணி, குங்குமம் என்னுந் தொடக்கத்தன. வட்டம், நட்டம், பட்டினம் என்பன பாகதம், பிறவும் அன்ன.
2. ஒரு சொல்லாயினும்..........ஒரு சொல்லேயாம்: இக்கருத்து பொருந்தாது. ஆரியமும் தமிழும் என்ற இடம் என்பது வேறு வேறு நிலத்து வழங்கும் மொழிகளிடம். வழக்கு செய்யுள் என்பது ஒரு நிலத்து வழங்கும் ஒரு மொழியின் ஆட்சியிடம் ஆதலின் மறுப்புக் கருத்து பொருந்தாது-சிவ. |