“கடிமலர்ப் புன்னைக்கீழ்க் காரிகை தோற்றாளைத் தொடிநெகிழ் தோளளாத் துறப்பாயான் மற்றுநின் குடிமைக்கட் பெரியதோர் குற்றமாய்க் கிடவாதோ; ஆய்மலர்ப் புன்னைக்கீ ழணிநலந் தோற்றாளை நோய்மலி நிலையளாத் துறப்பாயான் மற்றுநின் வாய்மைக்கட் பெரியதோர் வஞ்சமாய்க் கிடவாதோ; திகழ்மலர்ப் புன்னைக்கீழ்த் திருநலந் தோற்றாளை யிகழ்மலர்க் கண்ணளாத் துறப்பாயான் மற்றுநின் புகழ்மைக்கட் பெரியதோர் புகராகிக் கிடவாதோ.” என இவை ஒழுக்கமும் வாய்மையும் புகழும் இறப்பக் கூறியன. குடிப்பிறந்தார்க்கு இம்மூன்றுஞ் சிறப்பக் கூறல் வேண்டும். ஏனைய வந்துழிக் காண்க. இன்னும் ‘அனைநிலை வகை’ என்றதனானே தலைவியாற்றாமை கண்டு வரைவு கடாவவோவென்று தலைவியைக் கேட்டலும் சிறைப்புறமாகவுஞ் சிறைப்புறமன்றாகவுந் தலைவி யாற்றாமை கூறி வரைவு கடாவுவனவும் பிறவும் வேறுபட வருவனவும் இதனான் அமைக்க. “கழிபெருங் கிழமை கூறித் தோழி யொழியா யாயினொன் றுரைக்கோ தெய்ய” கடவு ணெற்றிய கருங்கால் வேங்கை தடவுநிலைப் பலவொடு தாழ்ந்த பாக்கத்துப் பின்னீ ரோதி யிவடமர்க் குரைப்பதோர் பெண்யாப் பாயினு மாக வொண்ணுத லிலங்குவளை மென்றோட் கிழமை விலங்குமலை நாடநீ வேண்டுதி யெனினே”1
1. கருத்து: தோழீ! நின்மிகப் பெரிய உரிமையைச் சொல்லி நின் துயர் ஒழியாய் என்றால் யான் தலைவனிடம் சென்று இப்படி யொன்றைக் கூறுவேன். “மலை நாட! எம் தலைவியின் மெல்லிய தோளுக்கு உரிமையை விரும்புவாயானால் தெய்வம் உறையும் உச்சியுடைய வேங்கை மரம் பலா மரத்துடன் உள்ள பாக்கத்தில் உள்ள இவள் தமர்க்கு நின் விருப்பத்தை உரைப்பேன். அது பெண்ணை இற்செறிப்புக்குரியதாயினும் ஆக” என்பதே அக்கூற்றாகும். |