பக்கம் எண் :

பொருளதிகாரம்153

அது,

“பொன்காண் கட்டளை கடுப்பத் 1தன்ன
பைம்பூண் சுண்ணம் புடைத்த மார்பினன்.”

(பெரும்பாண். 220)

என வரும்

தன் பைம்பூண் புடைத்த செஞ்சுவட்டினையும் மார்பினையும் பொன்னுரையோடுங் கல்லோடும் உவமித்தமையின் இரட்டைக்கிளவி இரட்டை வழித்தாயிற்று. இரட்டைக் கிளவியெனப் 2பொருளினை முற்கூறியதனான் இரண்டு பொருளினை ஒன்றாகக் கூட்டி உவமிக்கக் கருதினான் உவமையினையும் இரண்டு ஒன்றாக்கியே உவமிக்குமென்பது கருத்து. உம்மையான் 3ஒற்றைக் கிளவியும் இரட்டைவழித்தாகி வருவன கொள்க.

அது,

“கருங்கால் வேங்கை வீயுகு துறுக
 விரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை.”

(குறு. 47)

என வரும். இரும்புலிக் குருளை 4யென்றதனையே துறுகல்லோடும் வேங்கைவீயோடும் ஒப்பித்தமையின் இப்பெயர்த்தாயிற்று.

(22)

[உள்ளுறை உவமம் இவ்வாறு வருமெனல்]

298.பிறிதொடு படாது பிறப்பொடு நோக்கி
முன்னை மரபிற் கூறுங் காலைத்
துணிவொடு வரூஉந் துணிவினோர் கொளினே.

1. ‘தன்ன--பைம்பூண்’ என்றே பேராசிரியர் பாடங் கொண்டார் என்பது ‘தன் பைம்பூண்’ என்ற அவர் உரையால் விளங்குகின்றது. ‘சண்பின் புன்காய்ச் சுண்ணம்’ என்பது நச்சினார்க்கினியர் கொண்ட பாடம். பெரும்பாண் 220-ம் அடி. (டாக்டர் உ. வே. சாமிநாதையர் பதிப்பு நோக்குக.)

2. பொருள்--உவமேயம்.

3. ஒற்றைக் கிளவி--உவமேயம். புலிக்குருளை உவமேயம். புலிக்குருளைபோல வீயுகு துறுகல் தோன்றுமென்றதனால் வீயுகு துறுகல் புலிக்குருளைக்கு உவமையாயிற்று என்றபடி. ‘அடையொடு பொருட்கடை புணர்க்கு மஃதிரட்டை’ என்னுஞ் சூத்திரத்து (மாறனலங்காரம். 103) உரையுள்ளும் ஒற்றைக் கிளவி இரட்டைவழித்தாதற்கு இச்செய்யுளையும் உதாரணமாக எடுத்துக்காட்டுதல் காண்க.

4. இரும்புலிக் குருளை யென்றதனை என்பது இரும்புலிக் குருளையொன்றனையே என்றிருப்பது நலம். என்று அதனையே எனவும் பிரித்தும் பொருள்கொள்ளலாம்.