பக்கம் எண் :

152உவமவியல்

[உவமப் பொருள் மரபுபற்றி யறியப்படுமெனல்]

296.உவமப் பொருளை உணருங் காலை
மரீஇய மரபின் வழக்கொடு படுமே.

இது, மேலதற்கோர் புறனடை; மேல் உவமப்பொருளானே உற்றதுணரச்செயல்வேண்டு மென்றான். இனி அங்ஙனம் உணருமாறு இது கூறினானாதலின்.

இ--ள் : உவமப்பொருளான் உற்றதுணருங்காலை மரீஇவந்த வழக்கொடுபடுத்து அறியப்படும் என்றவாறு.

அவை வருமாறு:--

“களவுடம் படுநரிற் கவிழ்ந்துநிலங் கிளையா.”

(அகம். 16)

என்பது, களவுடம்படுநர்க்குள்ள வேறுபாடு உலகத்து அடிப்பட வந்த வழக்காதலான், 1அஃது ஏதுவாக அதனையும் அறிந்துகொள்ளப்படு மென்றவாறு. எனவே, உலகத்து வழக்கினுள் அடிப்படத் தோன்றும் உவமையாயிற்றாயினும் உவமப்பொருள் புலப்பாடு செய்யாது,

“புறமதி போலு முகம்”

என்றது 2போலவென்பது இதன் கருத்து.

(21)

[அடையும் பொருளுமாக வரும் உபமேயத்திற்கு
அடையும் பொருளுமாகவே உவமையுங் கூறல்வேண்டுமெனல்]

297.இரட்டைக் கிளவி யிரட்டை வழித்தே.

இஃது, எய்தாததெய்துவித்தது; அடையொடு வந்த பொருளொடு புணர்க்குமாறு கூறினமையின்.

இ--ள் : இரட்டைக் கிளவி -- அடையும் அடையடுத்த பொருளுமென இரண்டாகச் சொல்லப்படுங் கிளவி; இரட்டை வழித்தே--அடையும் அடையடுத்த பொருளுமென இரண்டாக்கி நிறுத்தப்படும் உவமையின்வழித்து என்றவாறு.


1. அஃது--அடிப்பட வந்த வழக்கு. அதனையும்--உவமப் பொருளையும்.

2. போல--போல்வது என்றிருப்பது நலம். மதியுவமையாயினும் புறமதியை உவமை கூறல் அடிப்பட வந்த வழக்கன் றென்றபடி.