பக்கம் எண் :

பொருளதிகாரம்151

1“மருந்துகொண் மரத்தின் வாள்வடு மயங்கி.”

(புறம். 180)

என்றாற்போல்வனவும் அவை.

இனி, வாளாதே உவமஞ்செய்து உற்றதுணர்த்தாதவழித் தெளியுமாறு;

“உருவுகண் டெள்ளாமை வேண்டு முருள்பெருந்தேர்க்
2கச்சாணி யன்னா ருடைத்து.”

(குறள். 57--7)

என்பதனுள், அவர் செய்கை வன்மை கூறாராயினும் அச்சாணி யென்று உவமப் பொருள்தானே அச்செய்கை வன்மை கூறிற்று.

3“வேனிற் புனலன்ன நுந்தையை நோவார்யார்.”

(கலி. 84)

என்பதும் அது. ஒழிந்தனவுமன்ன. இனி உவமத்தின் உற்றதுணர்கவென்னாது பொருளென்றதனால் பொருட்கு அடுத்த அடையும் உவமவடைக்4கேற்றது உணரப்படாதன களையப்படுமென்பது. அது,

“பாசடை நிவந்த கணைக்கா னெய்த
 லினமீ னிருக்கழி யோத மல்குதொறுங்
 கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்.”

(குறுந். 9)

என்றவழிப், பாசடை நிவந்த கணைக்காலென நெய்தலாகிய பொருட்கு வந்த அடையிரண்டுங் கண்ணெனப்பட்ட உவமத்திற்கேற்ப வாராமையான் அவை தெளிமருங்கிலவென்று களைந்துகொள்க. ஒழிந்தனவுமன்ன. மற்றுப்,

“புறமதி யன்ன திருமுக மிறைஞ்சி.”

என்றவழி, அகத்துத் தோன்றும் மறுப்போலப் புறத்து மறு மதிக்கில்லை யென்பதூஉம், புறமதிபோலக் கறைதீர்ந்த முகமென்பதூஉம், உவமப் பொருளின் உற்றதுணருந் தெளிமருங்கென்றதனாற் கோடுமோவெனின், அங்ஙனங் கொள்ளாமைக்கன்றே வருகின்ற சூத்திரமென்பது

(20)


1. மருந்து கொண்மரம் என்றதனான் பலவடு விரவப்பெற்றமையும், மரம் அழியாமையும் பெறப்படும்.

2. அச்சாணி சிறிதாயினும் பெரும் பாரத்தையுடைய பண்டியைக் கொண்டுய்க்குமாறு போலப் பெரிய காரியங்களைக் கொண்டு செலுத்துபவர் என்றபடி. எனவே அதன் செயல்வன்மை கூறிற்று.

3. வேனிற்புனல் பலருமாடற் கிடங்கொடுத்தல்போலப் பல மகளிரும் புணர்ந்து விளையாடற்கிடமானவன் என்றபடி.

4. ஏற்றதுணரப்படாதன--'உற்றதுணரப்படாதன’ என்றிருத்தல்வேண்டும்; சூத்திரப் பகுதியாதலின்.