உதாரணம், “களவுடம் படுநரிற் கவிழ்ந்துநிலங் கிளையா.” (அகம். 16) என்றவழிக், கண்டோர்க்கெல்லாம் பெருநகையாகக் 1களவுண்டாகப்படுநரிற் கவிழ்ந்து நிலங்கிளையாவென உற்றதுணரக் கூறிய திலனாயினுங் கையொடுபட்ட களவுடையார்போல நின்றாளென்னும் உவமைப் பொருளானே எள்ளுதற் பொருள் தோன்றி நகை புலப்படுவதாயிற்று. “சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற் றுற்றெனப் பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக் கட்டி னிணக்கு மிழிசனன் கையது போழ்தூண் டூசியின் விரைந்தன்று மாதோ ஊர்கொள வந்த பொருநனொ டார்புனை தெரியல் நெடுந்தகை போரே. (புறம். 82) என்னும் பாட்டினுள் உவமப் பொருளாகிய 2போழ்தூண்டூசிக்குப் பல அடைகூறி அதனோடு உவமிக்கப்படும் போர்த்தொழிலினை யாதுமோர் அடையின்றி வாளாது கூறினானாயினும் உவமப் பொருளானே போர்த்தொழிற் குற்றதும் உணரக் கூறினானாம். என்னை? உண்டாட்டும் கொடையும் உரனொடு நோக்கி மறுத்தலும் முதலாகிய உள்ளக் கருத்தினான், ஒரு கணத்துள்ளே பல வேந்தரை ஒருங்கு வேறற்கு விரைகின்றது போர்த்தொழிலென்பது தெளியப்பட்டமையின். 3“உழுத நோன்பக டழிதின் றாங்கு,” (நல்லமிழ் தாகநீ நயந்துண்ணு நறவே.) (புறம்.125) எனவும்,
1. களவு உடம்படுநரின் என்றிருப்பது நலம். 2. போழ்தூண்டு ஊசி--வாரைச் செலுத்தும் ஊசி. போழ்--வார். தூண்டல்--செலுத்தல். போழ் தூண்டூசிக்கு அடைகள் சாறுதலைக் கோடலும் பெண்ணீனலும். இரண்டற்கும் போதற்பொருட்டுக் கட்டிலைப் பின்னி முடித்தற்காக இழிசனன் கையூசி விரைதல்போல இவனும் உண்டாட்டுக்கும் கொடைக்கும் உரனொடு நோக்கி மறுத்தற்கும் போதற்காக விரைந்து போர் செய்கின்றான் என்றபடி. உரனொடு நோக்கி மறுத்தல் என்பது எக்கருத்தில் வந்தது என்பது நன்கு புலப்படவில்லை. ஆயினும் அறிவொடு நோக்கி மறுத்தல்=வாதுசெய்தல் என்று கூறலாம், உரனோக்கி மறித்தல் எனவும் பாடமுள்ளது. உள்ளக் கருத்தினால் விரைகின்றது போர் என்க. 3. உழுத பகடு தான் விளைத்த நெல்லையுண்ணாது வைக்கோலை உண்ணுமாறுபோல நின் முயற்சியாற் செய்த பொருளை நீயுண்ணாது கள்ளையுண்ணா நின்றாய்; அது உனக்கு அமிழ்தாகுக என்றபடி. |