வொன்று நந்நான்கு பகுதியான் ஒன்றன்பினொன்று பிறக்கு மெனவுங் கூறுகின்றான். அவற்றுண் முதலன மூன்றினும் முன்னர்நின்ற ஒரு கூற்றினை இந்நாற்பகுதித்தென்கின்றது இச்சூத்திரமென உணர்க. ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்ட வழிக் கரந்தொழுகும் உள்ள நிகழ்ச்சி பெண்பாலதாகலாற் பெரும்பான்மையும் அவள்கண்ணே ஈண்டுக் கூறுகின்ற மெய்ப்பாடு சிறந்ததென்பது. இ-ள் : 1புகுமுகம் புரிதல் என்பது, ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்டவழித் தன்னை அவன் நோக்குதற்கண் விரும்பும் உள்ள நிகழ்ச்சியும்; புகுதலென்பது, தலைமகன் நோக்கிய நோக்கெதிர் தான்சென்று புகுதல்; முகமென்பது அங்ஙனந் தான் புகுதற்கிடமாகிய நோக்கு; நோக் கெதிர்நோக்குதலை முக நோக்குதல் என்பவாகலின் இந்நோக்கினை முகமென்றானென்பது. புரிதலென்பது, மேவுதல் என்றவாறு. அஃதாவது, தலைமகன் காண்டலைத் தலைமகள் வேட்டல் என்றவாறாம். மற்றிது தலைமகற்கு உரித்தன்றோவெனின், அவன் தான் காண்பினல்லது தற்காண்டலை நயவான்; அது தலைமையன்றாகலினென்பது; அது, 2”யானோக்குங் காலை நிலனோக்கு நோக்காக்காற் றானோக்கி மெல்ல நகும்.” (குற-1104) என வரும். பொறிநுதல் வியர்த்தல் என்பது, தலைமகன் தன்னை நோக்கியவழி உட்கும் நாணும் ஒருங்குவந்தடைதலின் வியர் பொறித்த நுதலளாதலும்; அது, 2”பெரும்புழுக் குற்றநின் பிறைநுதற் பொறிவிய ருறுவளி யாற்றச் சிறுவரை திறவென.” (அகம்-136) என வரும். இம்மெய்ப்பாடுந் தலைமகற்குரித்தன்று; உட்கும் நாணும் அவற்கின்மையின்.
1. தலைவன்நோக்கெதிர் தானும்நோக்கித் தன்னைப்பார்த் தலை விரும்பல். 2. நோக்காக்கால் தானோக்கி மெல்ல நகும் என்றதனுள் நகும் என்றதனால் தன்னை நோக்கலை விரும்பினாள் என்பது பெறப்படும். 3. இவ்வுதாரணம் பொறிநுதல் வியர்த்தற்குணம் அவட்குண்டென்ற அத்துணைக்கே யுதாரணம். |