பக்கம் எண் :

36மெய்ப்பாட்டியல்

நகுநய மறைத்தல் என்பது, அதன்பின்னர்த் தலைமகன்கட் டோன்றிய குறிப்புக்களான் நகுதற்கேதுவாகிய நயனுடைமை மனத்திற் பிறந்தவழியும், நகாது நிற்றலும்; அது,

“முகைமொக்கு ளுள்ளது நாற்றம்போற் பேதை
 1நகைமொக்கு ளுள்ளதொன் றுண்டு.”

(குற-1274)

என வரும். மடமையால் தோன்றிய நகையாகலான் இது மறைத்தலுந் 2தலைமகற்குரித்தன்று; எனவே, அவற்காயின் நகை தோன்றப்பெறுமென்பது; மற்று,

“சுரஞ்சொல் யானைக் கல்லுறு கோட்டின்”

(குறு-169)

என்னும் பாட்டினுள் ‘நும்மொடு நக்க வால்வெள் ளெயிறே என நகை 3கூறிற்றாலெனின், அங்ஙனம் மறைக்கப்பட்ட நகை தலைமகன் அறிந்தது மெய்ப்பாடாமாகலான் 4அவ்வாறு கூறினா னென்பது.

சிதைவுபிறர்க்கின்மை என்பது, அங்ஙனம் நகுநய மறைத்த வழியும், உள்ளஞ் சிதைந்து நிறையழியுமாகலின் அச்சிதைவு புறத்தார்க்குப் புலனாகாமை நெஞ்சினை நிறுத்தலும் என்றவாறு; அது,

“அகமலி யுவகைய ளாகி முகனிகுத்
 தொய்யென விறைஞ்சி யோளே.”

(அகம்-86)

எனத் தலைமகன் அறிய மெய்ப்பட்டதென்பது. இதுவுந் தலைமகற் குரித்தன்று; 5தன்சிதைவுணர்த்தினல்லது மறைக்குந் துணைச் சிதைவின்மையின்; என்னை?


1. நகை மொக்குள்:- நகை முகிழ்ப்பு. வெளிப்படாத நகை தனக்குண்டாய நகையைத் தலைவி நாணத்தாலும் உட்காலும் மறைத்தாளாகலின் அது பிறர்க்கு வெளிப்படாதாயிற்று. அந் நகை தலைவற்குச் சிறிது தோன்றினமையின் மெய்ப்பாடாயிற்று.

2. கனகசபாபதிப்பிள்ளை பதிப்பிலுள்ள தலைமகட்குரித்தன்று என்னும் பாடமும் அவட்காயின் என்னும் பாடமும் பொருத்தமில்லை. தலைமகற்குரித்து என்னும் பாடமும் அவற்காயின் என்னும் பாடமுமே பொருத்தம். இவை, சி. வை. தாமோதரம்பிள்ளை பதிப்பிற் பாடம்.

3. கூறிற்றாலெனின் என்றிருப்பதே நலம்.

4. அவ்வாறு கூறுதல்--மெய்ப்பாடு எனக் கூறல். கூறினான் என்றது இந்நூலாசிரியனை கூறினாள் என்று பாடங் கொண்டு அவ்வாறு என்பது நக்க என்பதைச் சுட்டிற்றாகக் கோடல் நலம்.

5. தலைவன் தன் மனச்சிதைவு உணர்த்தினல்லது தலைவி போல மறைக்குமளவு சிதைவு நிகழாமையின் என்றபடி. எனவே இவற்குச் சிதைவு பெரிதுண்டாகு மென்பது கருத்து.