பக்கம் எண் :

பொருளதிகாரம்37

“பெருமையு முரனு மாடூஉ மேன”

(தொல்-கள-7)

என்பவாகலின்.

இவை களவிற் சிறந்தனவாவதல்லது கற்பினுள் வருவன வல்ல என்றுணர்க. ‘சிதைவு பிறர்க்கின்மை’ எனவே, சிதைவு தலைமக னுணருமென்றானும்.

தகுமுறை நான்கு என்பது, இங்ஙனம் ஒன்றன்பின் ஒன்று தோன்றுதற்குத் தகுமெனப்பட்ட முறையானே வந்த அந்நான்கும் என்றவாறு; ஒன்றென மொழிப--களவிற்கு முதற் கூறென்ப என்றவாறு.

இனி, இவை நான்கும் முறையானே ஒருங்குவந்த செய்யுள் வருமாறு:

“யான்றற் காண்டொறுந் தான்பெரிது மகிழாள்
 வாணுதல் வியர்ப்ப நாணின ளிறைஞ்சி
 மிகைவெளிப் படாது நகைமுகங் கரந்த
 நன்னுத லரிவை தன்மனஞ் சிதைந்ததை
 நீயறிந் திலையா னெஞ்சே
 யானறிந் தேனது வாயா குதலே.”

(இல-வி-ப.531)

இஃது, இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. இதனுள், ‘தான்பெரிது மகிழாள்’ என்புழிச் சிறிது மகிழுமென்றமையான் இது புகுமுகம் புரிதலாயிற்று. ‘வாணுதல் வியர்ப்ப நாணின ளிறைஞ்சி’ என்பது பொறிநுதல் வியர்த்தல். ‘நகைமுகங் கரந்த’ என்பது நகுநய மறைத்தல். ‘மிகை வெளிப்படாது’ என்புழி, மேல் ‘அன்ன பிறவு மவற்றொடு சிவணி’ (267) என்னும் புறனடை யாற் றழீஇயின 1நகைமொக்குளும் பெற்றாம். ‘தன்மனம் சிதைந்ததை நீயறிந்திலையால்’ என்பது சிதைவு பிறர்க்கின்மை. பிறவும் அன்ன.

(13)

[இரண்டாம்பகுதி இத்துணையது எனல்]

262. கூழை விரித்தல் காதொன்று களைத
லூழணி தைவர லுடைபெயர்த் துடுத்தலோ
டூழி நான்கே யிரண்டென மொழிப.

1. நகைமொக்குளும் நகுநய மறைத்தலில் அடங்குமென்றபடி. என்னை? புறத்தார்க்குப் புலனாகாது. அரும்பிய நகையாதலின். அது தலைவற்குப் புலனாமென்றபடி.