[முன்னம் (குறிப்பு) இதுவெனல்] | 519. | இவ்விடத் திம்மொழி யிவரிவர்க் குரியவென் றவ்விடத் தவரவர்க் குரைப்பது முன்னம். |
இது, முன்னமென்று கூறப்பட்ட உறுப்புக் கூறுகின்றது. இ--ள் : யாதோரிடத்தானும் யாதானுமொருமொழி தோன்றியக்கால் இம்மொழி சொல்லுதற்குரியாரும் கேட்டற்குரியாரும் இன்னாரென்று அறியுமாற்றான் அங்ஙனம் அறிதற்கு ஓரிடம் நாட்டி அவ்விடத்துக் கூறுவார்க்குங் கேட்பார்க்கு 1மேற்றவுரை செய்யுட்கு 2ஈடாகச் சொல்லுவது முன்னம் என்றவாறு. ‘இவரிவர்க்குரியவென்று’ அறிவான், செய்யுட் கேட்டானெனவும், அவ்விடத்து ‘அவரவர்க்கு உரைக்க’ என்றான் ஆசிரியனெனவுங் கொள்க. என்றென்பது, எனவென்பதுபோலச் 3சொல்லினெச்சமாதலும் வினையெச்சமாதலும் உடைமையின் இஃது, “எனவெ னெச்சம் வினையொடு முடிமே.” (தொ. சொ. 438) என்பதோர் வினை யெஞ்சிநிற்கும். அவ்வினைதான் எச்சமாகலான் உரைப்பதென்னும் வினைகொண்டு முடியுமென்பது. “யாரிவ னெங்கூந்தற் கொள்வா னிதுவுமோ ரூராண்மைக் கொத்த படிறுடைத்து.” (கலி. 89) என்றக்கால், இம் 4மாற்றஞ் சொல்லுகின்றாள் தலைவியெனவும் சொல்லப்பட்டான் தலைமகனெனவும், முன்னத்தான் அறியப்படுத்தலின் இது முன்னவுறுப்பாயிற்று. ஒழிந்தனவற்றிற்கும் இஃதொக்கும். இவையெல்லாம், அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாகக் கூறுகின்றானென்பது. (207)
1. ஏற்ற செய்யுட்களாகச் சொல்லுவது எனவும் பாடம். 2. ஈடு--பொருத்தம். 3. சொல்லினெச்சம்--சொல்லெச்சம். என வென்பதுபோல என்று என்பதும் சொல்லெச்சமாயு நிற்கும். வினையெச்சமாயு நிற்கும். ஈண்டு வினையெச்சமாய் நின்று உரைப்பது என்னும் வினைகொண்டு முடிந்ததென்றபடி. 4. மாற்றம்--சொல். |