பக்கம் எண் :

596செய்யுளியல்

1என(வும்) அவை நந்நான்காமெனவும், மெய்ப்பாட்டியலுட் கூறியவாறெல்லாம் பிறவாற்றான் வேறுபடுவனவுங் கொள்ளப்படுமென்றவாறு.

(205)

[எச்சம் இதுவெனல்]

518.சொல்லொடுங் குறிப்பொடு முடிவுகொ ளியற்கை
புல்லிய கிளவி யெச்ச மாகும்.

இஃது, எச்சங் கூறுகின்றது.

இ--ள் : கூற்றினானுங் குறிப்பினானும் முடிக்கப்படும் இலக்கணத்தொடு பொருந்திய கிளவி எச்சமென்னும் உறுப்பாம் என்றவாறு.

‘முடிவுகொளியற்கை’ எனவே, செய்யுளின்கண்ணதன்றிப் பின் கொணர்ந்து முடிக்கப்படுமென்பது பெற்றாம். உதாரணம்:-

“செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த
 செங்கோ லம்பின் செங்கோட் டியானைக்
 கழறொடிச் சேஎய் குன்றம்
 குருதிப் பூவின் குலைக்கரந் தட்டே.”

(குறுந். 1)

எனச் செய்யுண் முடிந்தவழியும் 2‘இவற்றான் யாங் குறையுடையேம் அல்லேமென்று தலைவற்குச் சொன்னாளேல் 3அது கூற்றெச்சமாம்; என்னை? அவ்வாறு கூறவுஞ் 4சிதைந்ததின்மையின். தலைமகட்குச் சொன்னாளேல் அது குறிப்பெச்சம்; என்னை? 5அது காண்பாயாகிற் காணெனத் தலைமகளை இடத் துய்த்து நீக்கிய குறிப்பினளாகி 6அது, தான் கூறானாகலின்’ என்பது.

(206)


1. எனவும் என்றிருப்பது நலம்.

2. இவற்றான்--இக் காந்தள்மலர்களான்.

3. இவற்றான் யாங் குறையுடையேமல்லேம் என்றது கூற்றெச்சம்; இக்கூற்று எஞ்சிநின்றதாகலின். இவ்வாறு எஞ்சுவன இசையெச்சமென்று சொல்லப்படும்.

4. சிதைந்தது இன்மையின் என்றது பொருள் சிதைந்த தின்மையின் என்றபடி. சிதைதல்--வழுப்படல்.

5. அது என்றது காந்தளை.

6. அது--அக்குறிப்பு. அங்கே சென்று தலைவனைக் கூடு என்னுங் குறிப்பு.