பக்கம் எண் :

76மெய்ப்பாட்டியல்

இவை தலைமகற்கு மெய்ப்பாடெனப்படாவோவெனின் படுமாயினும் அஃது ஒப்பினது வகையென்றதனானே தலைமகட்கே உரிமைகொளப்படும்.

குடிமையொடு பிறப்பிடை வேற்றுமை யென்னையெனின், பிறப்பென்பது குடிப்பிறத்தல்; அதற்குத்தக்க ஒழுக்கங் குடிமை எனப்படும். குடிப்பிறந்தாரது தன்மையைக் குடிமையென்றானென்பது; அதனை 1ஊராண்மையெனவுஞ் சொல்லுப. ஆண்மை புருடர்க்காம். அஃது 2ஆள்வினை யெனப்படும். இது தலைமகட் கொப்பதன்றாலெனின், 3குடியாண்மை யென்புழி ஆண்மையென்பது இருபாற்கும் ஒக்குமாதலின் அமையுமென்பது. யாண்டென்பது ஒத்தவாறென்னையெனின், பன்னீரியாண்டும் பதினாறியாண்டுமே பெண்மையும் ஆண்மையும் பிறக்கும் பருவமென்பது ஓத்தினுள் ஒப்ப முடிந்தமையின் அதுவும் ஒப்பெனவே படும். ‘உருவு நிறுத்த காம வாயில்’ என்பது, பெண்மை வடிவும் ஆண்மை வடிவும் பிறழ்ச்சியின்றி அமைந்த வழி அவற்றுமேல் நிகழும் இன்பத்திற்கு வாயிலாகிய அன்பென்றவாறு.

இங்ஙனம் ஓதியவகையான் இவை ஒன்பதாகலிற் பத்தாமா றென்னையெனின், காமவாயிலெனப்பட்ட இயற்கையன்பு வடிவு பற்றியல்லது தோன்றாமையானும், குணம்பற்றித் தோன்றுவன செயற்கையன்பாகலானும், உருவினை அன்பிற்கு அடையாகக் கூறினானாயினும் உருவு சிறப்புடைமையின் அதனை நாம் பகுத்தெண்ணிக்கொண்டாமென்பது; என்னை?

“வன்கண் குடிகாத்தல் கற்றறித லாள்வினையோ
 டைந்துடன் மாண்ட தமைச்சு.”

(குறள். 632)

என்புழி, 4கற்றறிதலென்பதனை இரண்டாக்கி ஐந்தென்பவாகலின்.


1. ஊராண்மை--உபகாரியாந்தன்மை. ‘பேராண்மையென்ப’ என்னு முதலையுடைய குறளுரை நோக்குக.

2. ஆள்வினை--முயற்சி.

3. குடியாண்மை--குடியையாளுதல்.

4. இவ்வுரையால் பரிமேலழகர் பிந்தியவர் என்பது புலனாகின்றது. பரிமேலழகர் வேறுரை கூறி இவ்வுரைக்கருத்தை அநுவதித்துக் கூறலின்.