பக்கம் எண் :

பொருளதிகாரம்75

“களிறு கவர் கம்பலை போல
1வலரா கின்றது பலர்வாய்ப் பட்டே.”

(அகம்-96)

என்றாற் போல்வன.

கிளவியொடுதொகைஇயென்பது, இதனோடுந் தொகுத்தென்றவாறு; சிறந்தபத்தும் என்பது, விதந்தோதிய பத்தும் செப்பிய பொருள் என்பது, அழிவில் கூட்டமெனச் செப்பிய கற்பின்கண் வரும் மெய்ப்பாடெனப்படும் இவையும் என்பது.

மற்றுப் பதினொன்றனை யெண்ணிச் ‘சிறந்த பத்து இவை’ என்றதென்னையெனின்,--அதனை,

“ஒன்பதுங் குழவியோ டிளமைப் பெயரே.”

(556)

என்ற மரபியற் சூத்திரம்போல மொழிமாற்றி யுரைக்கப்படும். அங்ஙனஞ் சிறந்த பத்தும் புறஞ்சொன்மாணாக் கிளவியொடு 2தொகைஇயெனக் கூட்டியுரைக்க. சிறந்தபத்தென்றதனான் இவையன்றிக் கற்பினுள் வரும் மெய்ப்பாடு பிறவுமுளவேற் கொள்க.

(34)

[ஒப்பினுக்குரிய மெய்ப்பாடுகள்]

273. பிறப்பே குடிமை யாண்மை யாண்டோ
டுருவு நிறுத்த காம வாயி
னிறையே யருளே யுணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த வொப்பினது வகையே.

இதுவும் அம்மெய்ப்பாட்டுப் பகுதியே கூறுகின்றது; மேற்களவியலுள்,

“ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப.”

(90)

என்றான், அவ்வொப்பினது பகுதி இத்துணைக் குறிப்பு உடைத்தென்ப துணர்த்தினமையின்.

இ-ள் : ஒத்த பிறப்பும் ஒத்த ஒழுக்கமும் ஒத்த ஆண்மையும் ஒத்த பிராயமும் ஒத்த உருவும் ஒத்த அன்பும் ஒத்த நிறையும் ஒத்த அருளும் ஒத்த அறிவும் ஒத்த செல்வமுமெனப் பத்துவகைய தலைமகளொப்பினது பகுதி என்றவாறு,


1. அலர்--பரத்தைவீடு சேறலால் வரும் பழிமொழி.

2. பத்தும்தொகைஇயெனவே பதினொன்றென்பது பெறப்படும்.