பக்கம் எண் :

74மெய்ப்பாட்டியல்

பிரிவாற்றாமையென்பது, களவிற் பிரிவாற்றுதல் வேண்டுமாறுபோலக் கற்பினுட் பிரிவாற்றுதல் வேண்டப்படாமை; என்னை? புறத்தார்க்குப் புலனாகாமை மறைத்தல் கற்பிற்கு வேண்டுவதன்றாகலினென்பது.

“இடனின்றி யிரந்தோர்க்கொன் றீயாமை யிளிவெனக்
 கடனிறந்து செயல்சூழ்ந்த பொருள்பொரு ளாகுமோ
 வடமீன்போற் றொழுதேத்த வயங்கிய கற்பினா
 டடமென்றோள் பிரியாமை பொருளாயி னல்லதை.”

(கலி-2)

என்புழி, இனைய கற்பினாளைப் பிரியாமை பொருளாயினன்றி நும்மால் தரப்படும் பொருள் பொருளாகுமோ என்றதன் கருத்தாவது: பிரிவாற்றாமையின் இவள் இறந்துபடுவள், பின்னை அப்பொருள்கொண்டு ஆற்றும் இல்லறம் யாண்டையதெனத் தலைமகள் பிரிவாற்றாமை கூறியவாறாயிற்று.

1மறைந்தவை யுரைத்தலென்பது, களவுக்காலத்து நிகழ்ந்தனவற்றைக் கற்புக்காலத்துக் கூறுதல்; அவை,

“களவினு ணிகழ்ந்த வருமையைப் புலம்பி
 யலமர லுள்ளமொ டளவிய விடத்தும்.”

(தொல்-146)

என்புழித் தோன்றிய மனக்குறிப்பு; அது,

“முயங்கல் விடாஅ லிவையென மயங்கி
 யானோ மென்னவு மொல்லார் தாமற்
 றிவைபா ராட்டிய பருவமு முளவே
 யினியே; புதல்வற் றடுத்த பாலொடு தடைஇத்
 திதலை யணிந்த தேங்கொண் மென்முலை
 நறுஞ்சாந் தணிந்த கேழ்கிள ரகலம்
 வீங்க முயங்கல் யாம்வேண் டினமே
 தீம்பால் படுத றாமஞ் சினரே.”

(அகம் - 26)

என்பது, 2முன்னிலைப் புறமொழியாகலான் 3மறைந்த ஒழுக்கத்துக்கண் நிகழ்ந்த பொருளைக் கற்பினுள் உரைத்தவாறாயிற்று.

புறஞ்சொன்மாணாக்கிளவியென்பது, தலைமகற்குவந்த புறஞ்சொல்லின் பொல்லாங்கு குறித்து எழுந்த கிளவி; அவற்கு வரும் பழிகாத்துலுந் தனக்கு அறமாதலின் அதுவுங் கற்பின் கண்ணே நிகழுமென்பது; அது,


1. மறைந்தவை--களவினிகழ்ந்தவை. மறைவு--களவு.

2. முன்னிலைப்புறமொழி--முன்னிலையில்வைத்துப் பிறரைக் கூறுவதுபோலக் கூறுமொழி.

3. மறைந்த ஒழுக்கம்--களவொழுக்கம்.