பக்கம் எண் :

பொருளதிகாரம்73

1பொழுது மறுப்பாக்கமென்பது, களவின்கட் பகற்குறியும் இரவுக்குறியுமென வரையறுத்தாற்போல்வதோர் வரையறையின்மையின் அப்பொழுதினை மறுத்தலாகிய ஆக்கமென்றவாறு; எனவே, களவுக்காலத்துப் பொழுது வரைந்துபட்ட இடர்ப்பாட்டினீங்கிய மனமகிழ்ச்சி ஆக்கமெனப்படும்; அது,

“அயிரை பரந்த வந்தண் பழனத்
 தேந்தெழின் மலர தூம்புடைத் திரள்கா
 லாம்பல் குறுநர் நீர்வேட் டாங்கிவ
 ளிடைமுலைக் கிடந்து நடுங்க லானீர்
 தொழுதுகாண் 2பிறையிற் றோன்றி யாநுமக்
 கரியே மாகிய காலைப்
 பெரிய நோன்றனிர் நோகோ யானே.”

(குறு. 178)

என்பதனுள், தொழுதுகாண் பிறையில் தோன்றினமென்பது, களவுக்காலத்து இடையீடு பெருகிற்றெனக்கூறி அங்ஙனம் வரைந்தபொழுதினை மறுத்தகாலத்து நடுங்கலானீரென்றமையின் இஃது அப்பொருட்டாயிற்று.

அருண்மிகவுடைமையென்பது, களவுக்காலத்துப்போலத் துன்பமிகுதலின்றி, அருண்மிகத்தோன்றிய நெஞ்சினளாதல்; அது,

“நின்ற சொல்லர் நீடுதோன் 3றினிய
 ரென்று மென்றோள் பிரிபறி யலரே.”

(நற்றி-1)

என வரும்.

அன்புதொக நிற்றலென்பது, களவுக்காலத்து விரிந்த அன்பெல்லாம் இல்லறத்தின்மேற் பெருகிய விருப்பினானே ஒருங்குதொக நிற்றல்;

“எம்போற்--புல்லுளைக் குடுமிப் புதல்வற் பயந்து
 நெல்லுடை நெடுநகர் நின்னின் றுறைய
4வென்ன கடத்தளோ மற்றே.”

(அகம்-176)

என்புழி, புதல்வற்பயந்து நின்னின்றுறையுங் கடத்தினம் யாமென்றமையின் இஃது அன்புதொக நிற்றலாயிற்று.


1. பொழுதை மறுத்தலாய ஆக்கம். மறுத்தல்--நீக்கப் பெறல். மறுத்தகாலம்--கற்புக்காலம்.

2. பிறை--மாதப்பிறை; கார்த்திகைப் பிறையுமாம்.

3. ‘இனியர்’,‘பிரிபறியலர்’ என்றமையின், அன்பின்மிக்க அருளாயிற்று.

4. என்ன கடத்தள்--என்ன கடமையினள். எனவே யாம் கடமையேமென்பது பெறப்பட்டது.