உள்ளதுவர்த்தலென்பது, தலைமகனாற் பெற்ற தலையளி உள்ளதேயாயினும், அதனை உண்மையென்றே தெளியாது அருவருத்துநிற்கும் உள்ளநிகழ்ச்சி; அது, “கடல்கண் டன்ன கண்ணகன் பரப்பின்” (அகம். 176) என்னும் பாட்டினுள், “வேப்புநனை யன்ன நெடுங்கண் ணீர்ஞெண் டிரைதேர் வெண்குரு கஞ்சி யயல தொலித்த பகன்றை யிருஞ்சேற் றள்ளற் றிதலையின் வரிப்ப வோடி விரைந்துதன் னீர்மலி மண்ணளைச் செறியு மூர.” என்புழி, தலைமகன் வாயில்வேண்டச் சென்றானைப் 1பிறர் கூறும் பழிக்கு வந்தாயென்றமையின் இஃது உள்ளதுவர்த்தலாயிற்று. “பட்டுழி யறியாது பாகனைத் தேரொடும் விட் 2டவள் வரனோக்கி 3விருந்தேற்றுக் கொளநின்றாய்.” (கலி. 69) என்பதும் 4அது. புணர்ந்துழியுண்மையென்பது, முற்கூறிய இல்லது காய்தலும் உள்ள துவர்த்தலுமாகிய 5விகாரமின்றிப் புணர்ச்சிக் காலத்துச் 6செய்வன சென்ற உள்ளநிகழ்ச்சி; அது, “குளிரும் பருவத்தே யாயினுந் தென்றல் வளியெறியின் மெய்யிற் கினிதா--மொளியிழா யூடி யிருப்பினு மூர னறுமேனி கூட லினிதா மெனக்கு.” (ஐந். ஐம். 30) என்பது, என்னை? புணர்ந்துழியுண்மை கூறினாள், விகாரமின்றியாதலின்.
1. பிறர்கூறும் பழிக்கு அஞ்சிவந்தாயென்றது இச் செய்யுளில் ‘வெண்குருகஞ்சி’ என்ற இறைச்சியாற் பெறப்பட்டது. 2. அவள்--பரத்தை. 3. விருந்தேற்றுக்கொள--அவள் உன்னை விருந்தாக ஏற்றுக் கொள்ள. 4. அது என்றது உள்ள துவர்த்தலை. அவன் தன்பால்வந்த துண்மையாகவும் பரத்தை வரக்காணாமையின் வந்தாய் என்றமையின் அன்னதாயிற்று. 5. இல்லதை யுள்ளதாக்கிக் கூறலும் விகாரம். உள்ளதை இல்லதாக்கி வெறுத்துக் கூறலும் விகாரம். 6. செய்வனசென்ற--செய்வனவற்றிற் சென்ற. செய்வன--மேனி கூடல். கரணமுமாம். |