பக்கம் எண் :

பொருளதிகாரம்71

என்பது, தெய்வத்திறநோக்கித் தெருமந்ததாம்; என்னை? 1அவற்கிலவெனவும் அன்னவெனவுந் தாம்வேண்டிய குறை முடியாது பிரிந்தார்மாட்டு ஏதஞ் செய்யுங்கொ லென்றஞ்சி உரைத்தவாறு.

2”அச்சா றாக 3வுணரிய வருபவன்
 பொய்ச்சூ ளஞ்சிப் புலவே னாகுவல்.”

(கலி. 75)

என்பதும் அது. இது,

“ஐயர் பாங்கினு மமரர்ச் சுட்டியுஞ்
 செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற்கண்.”

(146)

தலைமகள் கருத்தின்கண் நிகழுங் குறிப்பென்பது.

4புரையறந்தெளிதலென்பது, தனக்கொத்த இல்லறம் இன்னதென்று தலைமகள் மனத்துப்படுதல்; அது,

“விரியுளைக் கலிமான் றேரொடும் வந்த
 விருந்தெதிர் கோடலின் மறப்ப லென்றும்.

(கலி. 75)

என வரும். இஃது அவனொடு சொல்லப்படாது ஊடியிருப்பேனாயின், விருந்துகொண்டு புகுதரும்; அதனான் ஊடலை மறப்பேனென்றமையிற் புரையறந்தெளிதலாயிற்று.

இல்லது காய்தலென்பது, களவின்கட்போலாது தலைமகற்கு இல்லாததனை உண்டாக்கிக்கொண்டு காய்தல்; அது,

“நற்றா ரகலத்துக் கோர்சார் மேவிய
 நெட்டிருங் கூந்தற் கடவுள ரெல்லார்க்கு
 முட்டுப்பா டாகலு முண்டு.”

(கலி. 93)

என வரும்; இது கடவுளரையே கண்டு தங்கினானாயினும், நெட்டிருங் 5கூந்தற் கடவுளரையே கண்டாயென்று இல்லது சொல்லிக் காயுமாகலின் அப்பெயர்த்தாயிற்று.


1. அவற்கில எனவும், அன்ன எனவும் என்னும் பாடங்களிற் சிதைவு இருத்தல்வேண்டும். ‘அவற்கிவளென வினவுவளென்று தாம் வேண்டிய’ என்றும் பாடம். ‘கேள்கேடூன்றவும் (அகம். 93)’ என்றும், ‘இல்லோர்க்கில்லென ‘எனவும் வருதலின், ‘அவற்கிவளென‘என்பது’ தமர்க்கிலவென’ என்றாதல், ‘இரவலர்க்கிலவென’ என்றாதல் இருந்திருக்கலாம்போலும்.

2. அச்சு--அச்சம்.

3. உணரிய--உணர்த்த.

4. புரைதல்--ஒத்தல்=இயைதல்.

5. கூந்தற்கடவுளரென்றது--பரத்தையரை.