பக்கம் எண் :

70மெய்ப்பாட்டியல்

[வரைந்தெய்தியபின் தலைமகள்கண் நிகழு மெய்ப்பாடுகள்]

272. தெய்வ மஞ்சல் புரையறந் தெளித
லில்லது காய்த லுள்ள துவர்த்தல்
புணர்ந்துழி யுண்மை பொழுதுமறுப் பாக்க
மருண்மிக வுடைமை யன்புதொக நிற்றல்
பிரிவாற் றாமை மறைந்தவை யுரைத்தல்
புறஞ்சொன் மாணாக் கிளவியொடு தொகைஇச்
சிறந்த பத்துஞ் செப்பிய பொருளே.

இஃது, அழிவில்கூட்டம் நிகழ்ந்தபின்னர் வருதற்குரிய மெய்ப்பாடு இவையென்கின்றது.

இ-ள் : இவ்வெண்ணப்பட்ட பதினொன்றும் மேற்கூறிய 1அழிவில் கூட்டமெனப்படும் என்றவாறு.

‘செப்பியபொருள்’ என்பது அழிவில்கூட்டமன்றே; அதற்கு முற்படும் மெய்ப்பாடெட்டனையும் அழிவில் கூட்டமென்றதுபோல, பிற்படும் மெய்ப்பாட்டினையும் அழிவில் கூட்டமென்பான் மேற்கூறிய அழிவில்கூட்டமே இவையுமெனக் கூறியவாறு. எனவே, வரைந்தெய்தியபின்னர்த் தலைமகள் மனத்து நிகழ்வன இவையென்பது கூறினானாம்.

தெய்வமஞ்சலென்பது, தலைமகற்குத் தொழுகுலமாகிய தெய்வமும் அவற்கு ஆசிரியராகிய தாபதரும் இன்னோரென்பது அவனானுணர்த்தப்பட்டு உணர்ந்த தலைமகள் அத்தெய்வத்தினையஞ்சி ஒழுகுமொழுக்கம் அவள்கட்டோன்றும்; அங்ஙனம் பிறந்த உள்ளநிகழ்ச்சியைத் ‘தெய்வமஞ்சல்’ என்றானென்பது. மற்றுத் தனக்குத் தெய்வத் தன் கணவனாதலான் அத்தெய்வத்தினைத் தலைமகளஞ்சுதல் ஏற்றுக்கெனின், அவனின் தான் வேறல்லளாக மந்திரவிதியிற் கூட்டினமையின் அவனான் அஞ்சப்படுந் தெய்வந்தனக்கும் அஞ்சப்படுமென்பது. அல்லதூஉந் தலைவற்கு 2ஏதம் வருமெனவும் அஞ்சுவளென்பது.

“சினைவாடச் சிறக்குநின் சினந்தணித் தீகெனக்
 கனைகதிர்க் 3கனலியைக் காமுற லியைவதோ.”

(கலி. 16)


1. அழிவில்கூட்டம்--இடையறவுபடாத கூட்டம். என்றது கற்பினை மனமழிவில்லாத கூட்டம் என்பர் இளம்பூரணர்.

2. ஏதம்--தீங்கு.

3. கனலி--ஞாயிறு. இது தெய்வம்.