வருந்துய ரவலந் தூக்கின் மருங்கறி வாரா மலையினும் பெரிதே.” என்னுஞ் சுரிதகமும் அது. காதல் கைம்மிகல்--காமங் கையிகந்தவழி நிகழும் உள்ள நிகழ்ச்சியும்: அது, “உள்ளி னுள்ளம் வேமே யுள்ளா திருப்பினெம் மளவைத் தன்றே வருத்தின் வான்றோய் வற்றே காமஞ் சான்றோ ரல்லர்யா மரீஇ யோரே.” (குறு. 102) என வரும். கட்டுரையின்மை--உரைமறுத்திருத்தலும்; அதனானே அதற்குத் தோழிகண்ணாயினுந் தலைமகன்கண்ணாயினும் உரைமுறை நிகழ்வதல்லது தலைமகள் உரையாளென்பது பெற்றாம்; அது, 1”யான்ற னறிவ றானறி யலளே யாங்கா குவள்கொ றானே பெருமுது செல்வ ரொருமட மகளே.” (குறு. 337) என்பது, தலைமகள் கட்டுரையாதிருத்தலின், தலைமகன் தமரினெய்தல் வேண்டினமையிற் கட்டுரையின்மையின் வரைவு கடாவுதலாயிற்றென்பது. ஒழிந்தனவும் அவ்வாறே வரைவுகடாதற்கு ஏற்றவாறு2உரையிற் கொள்க. என்றாயிருநான்கே அழிவில்கூட்டம்--என்றெண்ணப்பட்ட மெய்ப்பாடெட்டும் பின் அழியாத கூட்டத்திற்கு ஏதுவாம் என்றவாறு. அஃதாவது, வரைந்தெய்துங் கூட்டமென உணர்க. (23)
1. இச்செய்யுள் குறுந்தொகையுள் வேறுதுறைக்கு உதாரணமாகின்றது. பேராசிரியர் வரைவுகடாதற் கருத்தென்று கூறலின் இவர் வேறுதுறையாகக் கொண்டனர்போலும். வரைவு கடாதல் என்பது வரைவு வேண்டல் என்ற கருத்துப்போலும். வரைவுகடாவல் தோழிகூற்றாகலின். இளம்பூரணரும் வரைவு வேண்டலென்று கொள்ளுகின்றார் என்று உ.வே. சாமிநாதையரவர்கள் தமது குறுந்தொகையுரையுட் கூறியுள்ளார். ஆயின் வெளிவந்த இளம்பூரணர் உரையுள் அவ்வாறு காணப்படவில்லை. உரைகளையும் பின்னுள்ளார் ஏட்டுப்பிரதிகளில் திருத்தி எழுதியுள்ளார்கள்போலக் காணப்படுகின்றது. 2. உரை--அவ்வவ்வாக்கியம். |