பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை127

விரவும் என்ப = திணைக்குரிப்பொருளாய் ஐந்திணை ஒழுக்கத்தோடு அமைய அகத்துறைகளில் கலந்து வரத்தகுவன பிறவும் வந்து பயிலும் என்று கூறுவர் அகப்பொருணூலோர்.

குறிப்பு : இவ்வாறு கொள்ளாமல், இச்சூத்திரத்திற்கு “முல்லைக்குரிய முதற்பொருளும் கருப்பொருளும் விரவு தலாமென” இளம்பூரணர் கூறும் பொருள் பொருந்தாது. இதுவும் முன்னிரண்டும் இந்நூலார் திணைப்பொருள்களெனப் பொதுப்படக் கூறியதால், உரைகாரர் இதை முல்லைக்கும் முன்னிரண்டைப் பாலைக்கும் தனித்தமைத்துக் கூறுவது சூத்திரக் கருத்தாகாமை தேற்றம். மேலும், ‘திணைமயக் குறுதலும்’ என்னும் இவ்வியலின் முன் (12ஆம்) சூத்திரத்தால் முதலொடு திணைக்குரிப்பொருள் ஐந்து மயங்குதற்கும், ‘உரிப்பொரு ளல்லன மயங்கவும் பெறுமே’ என்னும் (13ஆம்) சூத்திரத்தால் ஐந்திணை இலக்கணத்திலடங்காத அகத்திற்குரிய பிற உரிப் பொருளெல்லாம் முதற் பொருளொடு மயங்குதற்கும், ‘எந்நிலமருங்கிற் பூவும் புள்ளும்’ என்னும் (19ஆம்) சூத்திரத்தால் கருப்பொருள்கள் தம்முள்ளும் முதல் உரிப்பொருள்களோடும் விரவுதற்கும், புறனடைச் சூத்திரங்கள் தனித்தனியே கூறி வைத்தாராதலால், ஈண்டு மீண்டும் முன்கூறிய முதலொடு கருப்பொருள் விரவுதலையே கூறினாரென்பது கூறியது கூறலா மாதலின் அது பொருந்தாதென்க. ஐந்திணையிலடங்காப் பிற உரிப் பொருட்டுறைகள் இவ்வியலில் மேற்சுட்டினமட்டோடமையாது வேறு வருவனவு முளவாதலின். அவற்றை யமைக்க இப்புறநடை ஈண்டுக் கூறப்பட்டது.

தலைமக்களின் மனையற மாட்சியைச் செவிலி வியந்து பாராட்டல், கற்பறக்காதலால் இற்சிறப்பின்பம் தலைவன் பாராட்டல், தலைவன் வரவு கூறுவாரைத் தோழி வாழ்த்தல், அவரைத் தலைவி வாழ்த்தல், இயற்பட மொழிதல், பரத்தை தலைவி பாங்காயினார் கேட்பக் கூறல் போல்பவையும் பிறவும் முன் கூறியவற்று ளடங்காமையின், அவையமைய இப்புறனடைச் சூத்திர மின்றியமையாமையறிக.

“பிரசங் கலந்த வெண்சுவைத் தீம்பால்
 விரிகதிர்ப் பொற்கலத் தொருகை யேந்திப்
 புடைப்பிற் சுற்றும் பூந்தலைச் சிறுகோ
 லுண்ணென் றோக்குபு புடைப்பத் தெண்ணீர்
 முத்தரிப் பொற்சிலம் பொலிப்பத் தத்துற்