பக்கம் எண் :

136நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

காமஞ்சாலா இளமையோள் என்பது அறியப்படும். (2) ‘களைநரின் நோய் செயும் கவின்’ எனவும், ‘இடைநில்லா தெய்க்கு நின்உரு’ எனவும், ‘ஒல்லையே உயிர் வவ்வும் உரு’ எனவும் அவளைப் புகழ்வதாலும், இக்கலியுள் சுரிதகத்தில் ‘மற்றிந் நோய் பொறுக்கலாம் வரைத்தன்றிப் பெரிதாயின், பொலங்குழாய் மறுத்திவ்வூர் மன்றத்து மடலேறி நிறுக்குவன் போல்வல் யான், நீ படுபழியே’ எனப் பழிப்பது போல அவள் பெருமை கூறுதலாலும், நன்மையும் தீமையும் என்றிரு திறத்தாலும் தன்னொடும் அவளொடும் தலைவன் தருக்கிய புணர்த்துக் கூறுதல் காண்க. (3) இளையோள் தனக்கு மறுமாற்றம் கூறாவழியும், “நுமர்தமரின் லென்பாய்” என விளித்து அவளிடம் சொல்லெதிர் பெறாத்தலைவன் தானே சொல்லி இன்புறுதல் காண்க.

சூத்திரம் : 50 
 ஏறிய மடற்றிறம், இளமை தீர்திறம்,
தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்,
மிக்க காமத்து மிடலொடு தொகைஇ,
செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே.

கருத்து : இது, நிறுத்தமுறையானே, எழுதிணைகளுள் இறுதியாக எஞ்சி நின்ற பெருந்திணை இயல் கூறுகிறது.

பொருள் : ஏறிய மடற்றிறம் = மடலேறுவேன் எனக் கூறுதலோடமையாது, தலைவன் மடலேறுதலும்; இளமை தீர்திறம் = இன்பம் துய்த்தற்கு உரிய பருவம் கழிந்தபிறகு எழும் விழைச்சு விருப்பமும்; தேறுதலொழிந்த காமத்து மிகுதிறம் = தெளிய வொண்ணாமல் அறிவழிக்கும் கழி காமமும்; மிக்க காமத்து மிடலொடு தொகைஇ = கரைகடந்த காமத்தால் விரும்பாரை வலிதிற் புணரும் வன்கண்மையொடு கூட்டி; செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே = கூறப்பட்ட இந்த நான்கும் புரைபடுகாம இழிவொழுக்கத்தின் வகை குறிப்பனவாகும்.

குறிப்பு : திணை என்பது ஒழுக்கம். இங்குப் ‘பெருந்திணை’ என்பது குறிப்பால் சிறிய ஒழுக்கம் எனப் பொருள்படும். கழிகாமத்தைச் சிறுமை எனக் கூறும் மரபு, “செருக்கும் சினமும் சிறுமையும்” எனும் குறளில் காமக் குற்றத்தைச் ‘சிறுமை’ எனலால் அறிக. அறிவுடை மக்கட்டன்மைக்