| 190 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
ஆண்டு வாழ்வோர்க்கு அஞ்சுதல் உண்டாக அந்நாட்டிடத்தே சென்று, வேந்தனை வேந்தன் அடல் குறித்தன்று = ஒரு வேந்தனை ஒரு வேந்தன் கொற்றம் கோடல் குறித்தல் மாத்திரைத்து வஞ்சித்திணை என்றவாறு’. அதற்குமேல் அவர் தரும் சிறப்புரையாவது : “ஒருவன் மண்ணசையானே மேற் சென்றால், அவனும் அம்மண்ணழியாமல் காத்தற்கு எதிரே வருதலின், இருவர்க்கும் மண்ணசையால் மேற்சேறல் உளதாகலின், அவ்விருவரும் வஞ்சி வேந்தர் ஆவர் என்றுணர்க. ” இவருரை, சூத்திரச் சொல்லமைதிக்கு ஏற்காததோடு, வஞ்சி யியல்பை இழிதகு பழிதரும் பிழையொழுக்கமாகவும் பண்ணுகிறது. எஞ்சா மண்ணசை என்ற தொடர் அதை அடுத்து நிற்கும் வேந்தனை என்னும் இரண்டாம் வேற்றுமைச் சொல்லுக்கு நேரே அடையாயமைவது வெளிப்படை. அவ்வளவிற் கொள்ளாமல் அத்தொடரைப் பின் வரும் வேந்தன் என்னும் எழுவாய்ச் சொல்லுக்கும் ஏற்றி, அவன் படையெடுத்துச் செல்லுதற்குக் காரணமே மற்றவன் மண்ணிடத்து அவனுக்குள்ள வேட்கையாகுமென இவ்வுரைகாரர் விளக்குகின்றார். மன்னர் போர்கருதிப் படையெடுப்பதன் நோக்கமெல்லாம் பிறர்மண் கவரும் வேட்கைதான் எனும் கொள்கை நாகரிக உலகம் மதிக்கும் போரறமழித்துப் பழிக்கிடனாக்கும். தக்க காரணமின்றித் தவறற்ற மெலியாரின் நாட்டை வலியார் மண் வேட்கையாலே படையெடுத்துச் சென்று வென்று கவர்தலே வஞ்சித்திணை எனக் கூறுவது உயர்ந்த பழந் தமிழ் ஒழுக்கத்தைப் பழிக்கத்தகும் பிழையாக்கி முடிப்பதாகும். வலிச்செருக்கால் மெலியர் நாட்டைப் பறிப்பது உலகியலில் உண்டேனும், அதனை வெறுத்து விலக்குவதை விட்டு வேத்தியல் அறமாக்கி வஞ்சியொழுக்கமெனச் சிறப்பித்து ஒரு திணைவகையாக்குவது, ‘அறனறிந்து மூத்த அறிவுடைய’ தொல்காப்பியர் நூற்பெருமைக் கிழுக்காகும். அஃது அவர் கருத்தன்மை அவர் சூத்திரச் சொல்லமைப்பே தெற்றெனத் தெளிக்கின்றது. இச்சூத்திரத்தில் ‘எஞ்சா மண்ணசை யாலிரு வேந்தர்’ என்னாமல் ‘எஞ்சா மண்ணசை வேந்தனை’ என்றமைத்ததால் முன்னுரைகாரர் பொருள் தொல்காப்பியர் கருத்தன்று என்பது தேற்றமாகும். |