| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 191 |
படையொடு பிறர்மேற் செல்லுதற்கு மண்ணசையே நோக்கமாயின் அது உயரொழுக்கமாகாமல் ‘துன்பம் தவாஅது மேன்மேல் வரும்’ இழுக்கமாகும். இனி, மண்வேட்கையால் தன் மெலிவு நோக்கியிருக்கும் பகைவனை வென்றடக்க முயலாமல் வாளாவிருப்பது ஆண்மையற மழிப்பதாகும். அதனால் தன்னாட்டின்மேல் தணியாத வேட்கையுடைய அறமற்ற அயல் மன்னன் வலிபெருக்கித் தன்மேல் வருமுன்னமே தக்க படையொடு தான்சென்று அவனைப் பொருதடக்குவது அறிவும் அறனுமாகும். அது செய்யானை எஞ்சா மண்ணசையுடையான் வஞ்சத்தால் வலி மிகவளர்த்து வாய்த்தபோது வந்து தடிவனாகையால், காலத்தே சென்று அத்தகைய ஆசையுடையானை வென்றடக்கி ஆண்மையற மாற்றுதல் போற்றத்தகும் ஒழுக்கமாகும். அவ்வொழுக்கமேபழந்தமிழர் கையாண்ட வஞ்சித்திணை. அதனையே இச்சூத்திரம் விளக்குகிறது. இளம்பூரணரும் அதுவே தொல்காப்பியர் கருத்தாகக் கொண்டு இச்சூத்திரத்திற்கு ‘ஒழியாத மண்ணைநச்சுதலையுடைய வேந்தனை வேறொரு வேந்தன் அஞ்சதகத் தலைச் சென்று அடல் குறித்தது’ என்று நேரிய உரை கூறுகின்றார். இச் செம்பொருள் சூத்திரச் சொற்கிடையால் தெளிவாகவும் அதைக்கொள்ளாமல், ‘எஞ்சா மண்ணசையைப் படையெடுத்துச் செல்லும் வஞ்சி வேந்தனுக்கு ஏற்றிக் கூறினது’, அறங்கருதா மறம் பேணி அயலார் மண்ணிலாசை வைத்துப் போர் மேற்கொள்ளுவதைப் போற்றத்தகும் மன்னர் ஒழுக்கமெனப் பேசும் ஒரு சில வடநூற் கூற்றைப் பண்டைத் தமிழரின் இழுக்கறு போரற ஒழுக்கம் விளக்கும் இப் புறத்திணைச் சூத்திரக் கருத்தாகக் காட்ட முயலும் விருப்பின் விளைவாகும். இவ்விருப்புக் காரணமாக இடைக்கால உரைகாரர் படைத்துக் கூறும் குறிப்புரையில் ஒவ்வாத முரண்பாடுகள் மலிவதும் இயல்பாகும். ‘அல்லதனை நல்லதெனச் சொல்லவரும் அல்லல்களுக்கெல்லையில்லை’ என்பதன் உண்மையை இவர் சிறப்புரைச் செய்திகள் வலியுறுத்துகின்றன. தணியாத மண்ணசையால் மெலியார் நாட்டை வலியார் வௌவுவது மன்னறமென்னும் ஆரியக் கொள்கையே வஞ்சித் திணையெனக் காட்டப் புகுந்து, அதை நாட்ட எழுதும் சிறப்புரையில் எழுகின்ற இடர்ப்பாடுகளைக் கருதுகின்றிலர். |