| 192 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
1. முதலில், படையொடு செல்லும் வேந்தனை மெலியார் மண்ணில் எஞ்சாநசையால் வஞ்சி சூடினான் எனக் கூறி அவனைத் தவறுடையனாக்குங் குற்றம் மேலே குறிக்கப்பட்டது. 2. இனி, ‘எஞ்சா மண்ணசை’ எனும் தொடரை நின்றாங்கே அதை அடுத்த வேந்தனை எனும் செயப்படுபொருளாகிய இரண்டாம் வேற்றுமைச் சொல்லுக் காக்காமல், அதைத் தாண்டிப் பின்வரும் வேந்தன் எனும் எழுவாய்ச் சொல்லுக்கு அடையாக்கிப் பிறர் மண்ணாசையே போரற நோக்கம் எனும் ஆரியக்கொள்கையைப் புகுத்தலாயினர். எனின், மூலத்தில் எஞ்சா மண்ணசை வேந்தனை எனச் சொற்றொடர் நிற்பதால், மண்ணசையைப் படை எடுக்கப்படும் வேந்தனுக்கு அறவேயில்லாமல் விலக்குமாறில்லை. வலிதிற் றம்நாட்டை வௌவ வரும் பிற வேந்தனைத் தன் மண் காக்க அதற்குரியான் எதிர்ப்பது இயலறமாகவும், அவ்வாறு எதிர்க்கும் அவன் தற்காப்பு முயற்சியும் மண்ணசை காரணமான வஞ்சியாகும்என இவ்வுரைகாரர் தம் சிறப்புரையில் வற்புறுத்தினார். இதிலெழும் முரண்பாடுகளை அவர் கருதுகிலர். படையொடு வந்த பகை வேந்தனை எதிர்த்துத் தன் மண் காப்பது அறமென்று கூறும் இவரே அத்தற்காப்புப் போர் முயற்சியும் மண்ணசையால் மேற்சேரும் வஞ்சியாம் என்று கூறுவது எவ்வாறு பொருந்தும்?தன்னாடு கவரவரும் பகைவனை எதிர்ப்பது அறக்கடனாகுமன்றி மண்ணாசைக் குற்றமாகாதன்றே. பிறர்மண் வேட்கையைக் குற்றமெனக் கொள்ளாமல் மன்னருக்கு நல்லறமென்று சொல்லப் புகுவதால், இவ்வாறு வந்த பகைவனை எதிர்க்கும் தற்காப்பறப்போரையும் மண்ணசைப் போரென முறைமாறிக் கூற நேர்ந்தது. 3. மேலும், தன் நாடு கவர வந்தானைத் தற்காப்பின் பொருட்டுத் தகைப்பதை வஞ்சியெனக் கூறினதுமன்றி, மேற் சென்றானையும் எதிரூன்றினானையும் ஒருசேர வஞ்சித் தலைவராக்கினர். இது, ‘வஞ்சி மேற்செலவு’ எனத் துணிந்த தமிழ் இலக்கணத்தையே தடுமாறச் செய்யுந் தவறாகும். வலிகருதி வந்த மற்றானை எதிர்த்து மலைதல் வஞ்சியாகாமல் வேறு தும்பைத்திணையாகும் எனத் தொல்காப்பியர் தெளியக் கூறுவதற்கு இவர் கொள்கை முழுவதும் முரணாகும். தும்மை தானே மைந்து பொருளாக வந்த வேந்தனைச் சென்றுதலை யழிக்கும் சிறப்பிற் றென்ப. |