பக்கம் எண் :

318நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

உணர்வும் குறிப்பும் ஒன்றுமற்ற வெறுநிலை; எனவே அன்மைப் பொருளது. நடுநிலையோ தகுதி எனும் அறிவுணர்வாகும்; அதனாலது நேர்மைசுட்டுமுணர்வுப் பொருட்டாம். இவை தம்முள் இயல் ஒவ்வாமை கண்கூடு; அந்நடுவு நிலையை “அப்பாலெட்டு மெய்ப்பாட்டு” வகையில் அடக்காமல் பின் பிறிதொரு பாலாம் முப்பத்திரண்டனுள் வைத்து எண்ணுதலானும், அது இரசம் எட்டனோடு கூட்டி எண்ணப்பெறும் சாந்தமாகாமை ஒருதலை.

சூத்திரம் : 4 
 எள்ளல், இளமை, பேதைமை, மடனென்று
உள்ளப் பட்ட நகைநான் கென்ப.

கருத்து : இது, முன்சிறந்த செய்யுட்பொருளாம் எண்ணான்குணர்வும் கண்ணியபுறனே நானான்காய்ப் பண்ணைத் தோன்றும் “அப்பாலெட்டே மெய்ப்பாடு” எனத் தொகுத்தவற்றுள், முதல் தொகுதியாம் நகை வகை நான்கும் அவற்றினியல்பும் கூறுகிறது.

பொருள் : எள்ளல் = நகைமொழி அதாவது கேலி; இளமை = மழவு; அஃதாவது பிள்ளைத் தன்மை; பேதைமை = அறிவின்மை; மடம் = ஏழைமை, அதாவது தேராது எளிதில் நம்பு மியல்பு; என்று உள்ளப்பட்ட நகை நான்கென்ப = இந்நான்கும் நகையின் வகைநான்காய்க் கருதப்படுமென்பர் (உள்ளுறும் உணர்வை நுண்ணிதி னுணரும் புலவர். )

குறிப்பு : எள்ளல், இழித்தலின் வேறுபட்ட நகைமொழி; பழிப்பில் பரிகாசம்; விளையாட்டேச்சுப் போல்வது. ‘இளிவு’ பின் சூத்திரத்தில் அழுகைவகைத்தாய் வேறு கூறுப்பெறுதலின், இங்கு நகைவகையுளொன்றெனப்படும் ‘எள்ளல்’ இழியாச் சிரிப்பாதல் தேற்றம்.

“ஊரன், எம்மிற் பெருமொழிகூறித் தம்இல்
 கையும் காலும் தூக்கத் தூக்கும்
 ஆடிப் பாவை போல,
 மேவன செய்யும் தன்புதல்வன் தாய்க்கே”

எனும் ஆலங்குடி வங்கனாரின் குறும்பாட்டில் (குறுந். 8) காதற் பரத்தை, தான் காதலிக்கும் வள்ளற்றலைவனை எள்ளுவதறிக.