பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை319

“ஒண்டொடீ! நாணிலன் மன்றஇவன்
ஆயின் ஏஎ!
பல்லார் நக்கெள்ளப் படுமடன்மா வேறி
நல்காள் கண்மாறி விடின்எனச் செல்வானாம்
எள்ளி நகினும் வரூஉம், இடையிடைக்
கள்வர்போல் நோக்கினும் நோக்கும்”

எனும் (61) குறிஞ்சிக்கலியில், பராவுதற்குரிய தலைவனைத் தோழி எள்ளல் காண்க.

“. . . மகளிர்
நலனுண்டு துறத்தி யாயின்
மிகநன் றம்ம மகிழ்ந!நின் சூளே”

எனும் ஓரம்போகியார் குறும்பாட்டிலும் (குறுந். 384) பராவுந் தலைவனை இழியாமல் எள்ளுவதறிக.

“நகையா கின்றே தோழி. . . .
 மம்மர் நெஞ்சினோன் தொழுதுநின் றதுவே”(அகம். 56)

எனுமகப்பாட் டடியுமதுவே, இளமை, அறிவுமுதிராப் பிள்ளைமை, பேதைமை, அறிவின்மை ( Stupidity); மடம் ஐயுறாது நம்புமியல்பு.  (Simplicity or innocence).   பேதைமை உவர்ப்பிக்கும்; மடம் உவப்புதவும். எள்ளல் முதல் நான்கும் மகிழ்வொடு மருவும் பெற்றிய; இதனை “நகையெனப்படுதல் வகையாதெனினே. . . . . நகையொடு நால்வகை நனிமகிழ்வதுவே”, என்ற தொல்லை நல்லுரையானுமறிக.

புறத்தே நகையாய் முகிழ்க்கும்குறி ஒன்றே அகத்து நிகழுமிந் நால்வகை யுணர்வும் தோற்றற் கேற்றதொரு மெய்ப்பாடாமெனு மியல்பைச்சுட்டி, “உள்ளப்பட்ட நகை நான்கென்ப” என்று அவற்றினியலும் வகையும் தோற்றுங்குறியும் ஒருங்கு விளக்கப் பெறுதலறிக. இதில் ‘என்ப’ எனும் வினைக்கு, “உள்ளுறுமுணர்வை நுண்ணிதினுணரும் புலவர்” எனும் எழுவாய் இடநோக்கி அவாய் நிலையாற் கொள்ளப்பட்டது. மெய்ப்பாட்டியலிறுதிப் புறநடைப் பொதுச் சூத்திரத்தில் உள்ளுணர்வின் நன்னயப் பொருள்கோள் தெரியின், திண்ணிதினுணர்வார்க்கல்லது எண்ணற்கரிதாமெனக் கூறுதலால், அதற்கேற்ப ஈண்டு “மெய்ப்பாட்டியல் கூறுபவர் உள்ளுறுமுணர்வை நுண்ணிதினுணரும் புலவர்” என்றேற்புடை எழுவாய் கொள்ளப்பட்டது.