பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை41

ஒழுக்கங்கண்ணிய பேராதலால் அன்பினைந்திணை யெனற்குப் புணர்தல் பிரிதல் முதலிய தலைமக்கள் ஐந்தொழுக்கங்களே சிறப்புரிமையுடைய பொருள்களாகும் என்பதை இச்சூத்திரம் விளக்குகிறது.

நிமித்தமாவது ஒவ்வோரொழுக்கத்தை யடுத்து முன்னும் பின்னும் முதலும் முடிவுமாகத் தொடுத்து அவ்வொழுக்கத்திற்கு இன்றியமையாத் தொடர்புடையனவற்றைச் சுட்டுவதாம். புகுமுகம்புரிதல், நகுநயம் மறைத்தல் முதலியன புணர்தலுக்கு முன்னெழும் நிமித்தங்களாம். அணிந்தவை திருத்தல், பாராட்டெடுத்தல் முதலியன புணர்வின் பின்னர் நிகழும் நிமித்தங்களாம். இவ்வாறு தொடர்பணிமை யற்றன நிமித்தமாகா.

“அன்னபிறவும். . . . . நிமித்தமென்ப” என்னும் மெய்ப்பாட்டியல், 19ஆம் சூத்திரமும் இதை வலியுறுத்தும். இவ்வாறே பிறதிணைகளுக்கும் நிமித்த வகைகளை ஏற்ற பெற்றி அமைத்துக்கொள்க. நிறுத்தமுறையானே முன்னர் முதற்பொருளைக் கூறினவர் அதனை யடுத்துக் கருப்பொருளைக் கூறாமல் அதற்குமுன் ஈண்டுரிப்பொருள்களைக் கூறுவதேனெனிற் சொல்லுவன்; அகப் பகுதியில் முதற்பொருள் உரிப்பொருள்கள் அல்லாதன அனைத்தும் கருப்பொருள்களா யமைதலின், முதலில் வரையறைப்பட்டவற்றை விளக்குவான் றொடங்கி, நிலம்பொழுதெனும் இரண்டே வகையுளடங்கும் முதற்பொருள் கூறினதும், அளவறுதிப்படாக் கருப்பொருள்களைக் கூறுமுன், ஐந்து ஒழுக்கத்தளவில் அடங்கும் உரிப்பொருளை இடையிற்கூறி யமைத்தபெற்றி உய்த்துணர வைத்தார். அகவகைச் செய்யுள்களனைத்தும் இவ்வைந்திணையே கூறுதலின், எடுத்துக்காட்டு ஈண்டைக்குவேண்டா.

சூத்திரம் : 15 
 கொண்டுதலைக் கழிதலும் பிரிந்தவ ணிரங்கலும்
உண்டென மொழிப ஓரிடத் தான.

கருத்து : இது, மேலைச்சூத்திரத்தில் திணைக்குரிப் பொருளென விளக்கிய ஐந்தனுளடங்காதனவாய்த், தம்மியல்பால் அகத்திணைகளுக் குரிப்பொருள்களாய் ஆட்சி பெறும் பிற சிலவும் உண்டெனக் கூறுகிறது.