| 94 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
இனி, “நோய்மிகப் பெருகித் தன் நெஞ்சுகலுழ்ந்தோளை, அழிந்தது களைஇய ஒழிந்ததுகூறி வன்புறை நெருங்கி வந்ததன் திறத்தோடு” எனப் பாடங்கொண்டு, ‘மகட் பிரிவாற்றாது அரற்றும் தாயை அவள் வருத்தம் தீர்த்தல் கருதித், தலைவியும் தலைவனும் கூறியனவும் செய்தனவும் எடுத்துச்சொல்லி விரைவில் மீள்வாரென வற்புறுத்தித் தேற்றுங் கூற்றோடே, எனப்பொருள் கொள்ளுவதும் பொருந்துவதாகும். அதற்குச் செய்யுள்: “அன்னை வாழியோ அன்னை நின்மகள்”எனும் கீழ் வருஞ்செய்யுள் இதற்கு எடுத்துக்காட்டாகும். ‘தலைவரும் விழுமநிலை எடுத்துரைத்தற்’குச் செய்யுள்: “பொலம்பசும் பாண்டிற் காசுநிரை அல்குல் இலங்குவளை மென்றோள் இழைநிலை நெகிழப் பிரிதல் வல்லுவை யாயின் அரிதே விடலையிவள் ஆய்நுதற் கவினே” (ஐங். 310) இனி, தோழி தலைவற்குத் தலைவி விழுமம் கூறுதற்குச் செய்யுள்: “பாஅல் அஞ்செவி” எனும் பாலைக்கலியில், “பொய்ந்நல்கல் புரிந்தனை புறத்தரல் கைவிட் டெந்நாளோ நெடுந்தகாய் நீசெல்வ தந்நாள்கொண் டிறக்குமிவ ளரும்பெற லுயிரே” (பாலைக்கலி. 5) என வரும் போக்கியலுமதுவே. இனி, தோழி தலைவிக்குத் தலைவன் விழுமம் உரைத்தற்குச் செய்யுள் வருமாறு: “தினைகிளி கடிகெனிற் பகலும் ஒல்லும்; இரவுநீ வருதலின் ஊறும் அஞ்சுவல்; யாங்குச்செல் வாமென் னிடும்பை நோய்க்கென ஆங்குயான் கூறிய அனைத்திற்கும் பிறிதுசெத் தோங்குமலை நாடன் உயிர்த்தோன் மன்ற; |