| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 93 |
கூற்றுக்கள் நிகழ்த்தும் திறத்தொடு; என்றிவையெல்லாம்; இயல்புறநாடின் ஒன்றித் தோன்றும் தோழிமென = அகத்துறை இலக்கணத்தை ஆராயின் தோழிக்குரியனவாய்ப் பொருந்தித் தோன்றும். குறிப்பு : விடுத்தற்கண்ணும் என்பதற்குப் பண்டை உரையாளராய இளம்பூரணர் தலைவியைத் தோழி தலைவனுடன் கூட்டிவிடுத்தற்கண்ணும் எனப்பொருள் கூறுவர். ‘போக்கற் கண்ணும்’ என்பதும் இதனையே குறிக்குமாதலின், இவர்பொருள் ஆசிரியர்க்குக் கூறியது கூறல் என்னும் குற்றம்தரும். அன்றியும், பின் தலைவன் கூற்றுக்களைக்கூறும், ‘ஒன்றாத் தமரினும்’ எனும் சூத்திரத்தில் தலைவன் தலைவியை “ஒன்றிய தோழியொடு வலிப்பினும் விடுப்பினும்” என்று தொல்காப்பியர் கூறுதலான், தலைவியைத் தலைவன் உடன்கொண்டு செல்லுதலும் விடுத்துச்செல்லுதலும் உண்டெனத் தெளியக் கிடத்தலின், ஈண்டு விடுத்தல் என்பதும் தலைவியைத் தலைவன் விட்டுச் செல்லலையே குறிக்குமென்பது ஒருதலை. இச்சூத்திரத்தில் தலைவன் மொழிந்ததை எடுத்துக்கூறித் தலைவியைத் தோழி ஆற்றுவித்தலைக் கூறுதலானும், தலைவி வருந்தத் தலைவன் அவளை விட்டுச் செல்லுதலுண்டென்பது போதரும். ‘தலைப்பெயர்த்துக் கொளினும்’என்பதற்கு நச்சினார்க்கினியர் உடன்போய தலைவியைத் தேடிச்செல்லாமல் தாயை மீட்டுக் கொள்ளுதல் எனப்பொருள் கொள்ளுவர். இதற்கு ஆன்றோர் செய்யுள் ஆட்சியின்மையின் இவ்வுரை சிறவாது. இதற்கு நச்சினார்க்கினியர் காட்டும், ‘அவளே, உடனமர் ஆயமொடு ஓரைவேண்டாது’ எனும்பாட்டில் சுரஞ்செல்லும் தாயை மீட்ட குறிப்பொன்றுமில்லை. மகட் பிரிவுக்கு வருந்தும் தாயைத் தோழி ஆற்றுவித்ததையே இச்செய்யுள் குறிக்கிறது. “பால்பாற் படுப்பச் சென்றனள்; அதனால் நீஎவ னிரங்குதி அன்னை விழவயர்ந் திருப்பின் அல்லதை இனியே” என்பதே ஈண்டுத் தோழி கூற்றாதல் காண்க. ‘ஒழிந்ததுகூறி’ என நச்சினார்க்கினியர் கொண்ட பாடத்தினும், காலத்தால் முற்பட்ட இளம்பூரணர் கொண்ட ‘மொழிந்தது கூறி’ எனும் பாடமே மரபுநிலை வழாச்சிறப்பும் செவ்வியு முடைத்து. வன்புறை நெருங்குதலாவது, வற்புறுத்திக் கூறலாகும். |