103

2 - பொருநராற்றுப்படை

ஆறு அலை கள்வர் படை விட - வழியை அலைக்கின்ற கள்வர் தம் கையிற் படைக்கலங்களைக் கைவிடும்படி,

21 - 2. அருளின் மாறு தலை பெயர்க்கும் மருவு இன் பாலை - அருளினது மாறாகிய மறத்தினை அவர்களிடத்துநின்று பெயர்க்கும் மருவுதல் இனிய பாலையாழை, 

பாலை : ஆகுபெயர்.

"கோடே பத்த ராணி நரம்பே, மாடக மெனவரும் வகையினதாகும்" என்றதனால் மாடகமொழிந்தன கூறினார்.

பத்தலினையும் (4), பொல்லம்பொத்திய (8) பச்சையாகிய (5) போர்வையினையும் (8), ஆணியினையும் (10), வறுவாயினையும் (12), மருப்பினையும், (13) வார்க்கட்டினையும் (15), நரம்பின்றொடர்ச்சியினையும் (18), காட்சியினையும் (20) உடைய பாலையாழென முடிக்க. 

"கொன்றை கருங்காலி குமிழ்முருக்குத் தணக்கே" என்பதனால் கோட்டிற்கு மரம் கொன்றையும் கருங்காலியுமாம்; பத்தற்கு மரம் குமிழும், முருக்கும், தணக்குமாம்.

23. 1வாரியும் - நரம்புகளைக் கூடத் தழுவியும், 

2 வடித்தும் - உருவியும்; வடித்தல் - நரம்பெறிதலென்று முரைப்பர். 

3 உந்தியும் - தெறித்தும், 

4 உறழ்ந்தும் - ஒன்றைவிட்டு ஒன்றைத்தெறித்தும். 

24. சீர் உடை நல் மொழி நீரொடு சிதறி - சீரையுடைத்தாகிய 

5 தேவபாணிகளை நீர்மையுடன் பரக்கப்பாடி,


1 "வார்தலென்றது சுட்டுவிரற் செய்தொழில்" (சிலப். 7. கட்டுரை, 12, அரும்பத.)

2வடித்தலென்றது சுட்டுவிரலும் பெருவிரலுங்கூட்டி நரம்பை அகமும் புறமும் ஆராய்தல்" (சிலப். 7. கட்டுரை, 12, அரும்பத.)

3 "உந்தலென்றது நரம்புகளை உந்தி வலிவிற்பட்டதும் மெலிவிற் பட்டதும் நிரல்பட்டதும் நிரலிழிபட்டது மென்றறிதல்" (சிலப். 7. கட்டுரை, 12, அரும்பத.)

4 " உறழ்தலென்றது ஒன்றிடையிட்டும் இரண்டிடையிட்டும் ஆராய்தல் " ( சிலப். 7. கட்டுரை, 12, அரும்பத.)

5தேவபாணியென்பது தேவர்ப்பரவலென்றும், அது பெருந்தேவ பாணி சிறுதேவபாணியென இருவகைப்படுமென்றும், அவை முத்தமிழ்க்கும் பொதுவென்றும், இசைத்தமிழில் வருங்கால் செந்துறை முதலிய இசைப்பாக்கள் பத்தின்பாற்படுமென்றும் கூறுவர்; சிலப். 6 : 35, அடியார்.