2 - பொருநராற்றுப்படை முடைய தவஞ்செய்த உடம்பைப் 1போகடாதேயிருந்து அத்தவத்தாற் பெறும் பயனைப்பெற்ற தன்மையையொப்ப,; 2மக்களென்னாது மாக்களென்றார், வீடுபேறு குறியாது செல்வத்தைக் குறித்தலின்,; 93. ஆறு செல் வருத்தம் அகல நீக்கி - வழிபோன வருத்தத்தை என்னிடத்துச் சிறிதும் நில்லாமற் போக்கி,; 94 - 5. [ அனந்தர் நடுக்க மல்ல தியாவது, மனங்கவல் பின்றி மாழாந் தெழுந்து :] அனந்தர் நடுக்கம் அல்லது மனம் கவல்பு யாவதும் இன்றி எழுந்து-கள்ளின் செருக்காலுண்டான மெய்ந்நடுக்கமல்லது வேறுமனக்கவற்சி சிறிதுமின்றித் துயிலுணர்ந்து, கவல்பு, கவற்சியெனப் பெயராய் நின்றது.; 96. மாலை அன்னதோர் புன்மையும் - யான் அவனைக் காண்பதற்கு முன்னாளின் மாலைக்காலத்தில் என்னிடத்தில் நின்ற சொல்லிற்கெட்டாத மிடியையும்,; 3அன்னது : நெஞ்சறிசுட்டு.
1 போகடலென்பது பண்டைக்கால வழக்கு; அஃது இப்போது போடலென வழங்கும்; "மத்த ளந்தான், விண்டுக வெறிந்து போகட்டோடினன் விரைந்து வீரன்" (பிரபு. மாயைகோலா. 39) 2 "மாவு மாக்களு மையறி வினவே", "மக்க டாமே யாறறிவுயிரே" (தொல்.மரபு. சூ. 32, 33) என்பவையும், "பொழுதளந்தறியும் பொய்யா மாக்கள்" (முல்லை. 55) என்பதில் மாக்களென்பதற்கு அறிவில்லாதோரென்றும், "மடக்குறு மாக்களோடு" (கலித.் 82 : 9) என்பதற்கு, ‘மடப்பத்தையுடைய சிறிய அறிவில்லாத மகளிரோடே' என்றும், "மூவறு பாடை மாக்கள்" (சீவக. 93) என்பதன் விசேட வுரையில், ‘மிலேச்சராதலின் ஐயறிவிற்குரிய மாக்களென்னும் பெயராற் கூறினார்' என்றும், "கோயின்மாக்கள்" (சீவக. 1278) என்பதில், ‘மக்கட்குரிய மனனின்றி அறிவு கெட்டமையின், ஐயறிவுடையாரென்று 'மாக்களென்றார்' என்றும் நச்சினார்க்கினியர் எழுதிய உரைகளும், "மக்கட்பதடியெனல்" (குறள். 196) என்புழி, ‘அறிவென்னும் உள்ளீடின்மையின் மக்கட்பதடி யென்றார்' என்று பரிமேலழகர் எழுதிய விசேட வுரையும் இங்கே கோடற்குரியன. 3 "உண்டுவைத் தனைய நீயும்" (சீவக. 271) என்பதில், ‘அனைய, நெஞ்சறி பொருண்மேற்று' என்பர் ந. ; "ஆடரவக் கிண்கிணிக்கா லன்னானோர் சேடனை" (தே. திருநா. ஆரூர்) எனபதில் அன்னானென்பதும் இத்தகையதே.
|