113

2 - பொருநராற்றுப்படை

வெய்து வாய் ஊழின் ஊழின் ஒற்றி - இருப்பு நாராசத்தே கொழுத்த இறைச்சிகளைக் கோத்துச் சுட்ட கொழுவிய பெரிய தசைகளின் வெம்மையை வாயிடத்தே இடத்தினும் வலத்தினும் சேர்த்தி ஆற்றித் தின்று,;

107. அவை அவை முனிகுவம் எனினே - புழுக்கின இறைச்சியையும் சூட்டிறைச்சியையும் யாங்கள் இனிவேண்டேமென்கையினாலே,;

107 - 8. சுவைய வேறு பல் உருவின் விரகு தந்து இரீஇ - இனிமையுடையவாய் வெவ்வேறாகிய பலவடிவினையுடைய 1பண்ணியாரங் கொண்டுவந்து அவற்றைத் தின்னும்படி எங்களையிருத்தி,;

உபாயங்களாற் பண்ணுதலின், விரகென்றார்; ஆகுபெயர்.;

109 - 10. (மண்ணமை முழவின் பண்ணமை சீறியா, ழொண்ணுதல் விறலியர் பாணி தூங்க :] பண் அமை சிறு யாழ் ஒள் நுதல் விறலியர் மண் அமை முழவின் பாணி தூங்க - பண் குறைவற்ற சிறிய யாழையுடைய ஒள்ளிய நுதலினையுடைய 2விறல்படப் பாடியாடுவார் மார்ச் சனையமைந்த முழவினது தாளத்திற்கு ஆடும்படி,

111. மகிழ் பதம் பல் நாள் கழிப்பி - மகிழ்ச்சியையுடைய கள்ளுண்டலிலே பலநாள் போக்கி,

இனி, பதம் காலமுமாம்;

111 - 2. ஒரு நாள் அவிழ் பதம் கொள்க என்று இரப்ப - ஒருநாள் சோறாகிய உணவையும் கொள்வாயாகவென்று வேண்டிக்கொள்கையினாலே,

112 - 4. முகிற் தகை முரவை போகிய முரியா அரிசி விரலென நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல் - முல்லைமுகையின் தகைமையினையுடைய வரியற்ற இடைமுரியாத அரிசி விரலென்னும்படி நெடுகின ஒன்றோடொன்று சேராத சோற்றையும்,

பழுத்த அரிசியை ஆக்கினமைதோன்ற நிரலமை புழுக்கலென்றார்.;

115 - 6. பரல் வறை கருனை 3காடியின் மிதப்ப அயின்ற காலை - பரலைப் பொரித்து அதனோடே கூட்டிய பொரிக்கறிகளையும் கழுத்திடத்தே வந்து நிரம்பும்படி விழுங்கினகாலத்தே,;

இனி, காடியைப் புளிங்கறியாக்கிப் புளிங்கறியோடே நிரம்ப விழுங்கின காலையென்றுமுரைப்பர்.

116. பயின்று இனிது இருந்து - அவனைவிடாதே இனிதாகவிருந்து,;


1 (பி-ம்.) ‘பண்ணிகாரம்'

2 விறலை வடநூலார் சத்துவமென்பர்

3 காடி கழுத்தென்பதை, "காடியிழந்து கவந்தமதாய்" (கந்த. சூரபன்மன்வதை. 136) எனபதனானுமுணர்க.