2 - பொருநராற்றுப்படை 127 - 8. யானும் என் அறி அளவையின் வேண்டுவ முகந்து கொண்டு - யானும் என்னுடைய குறைகளை யானறிந்த அளவாலே வேண்டுவனவற்றை வாரிக்கொண்டு,; 129. இன்மை தீர வந்தனென் - மிடி எக்காலமும் இல்லையாம்படி வந்தேன்; யானும் அவன் (64) வரைப்பின் (65) வாயிற்கண்ணே (66) புக்கு என் இடும்பை தீர்தல்காரணமாக (67) எய்யேனாகி (68) விடியற்காலத்தே (72) ஒன்று யான்பெட்டா அளவையிற் (73) கொளல்வேண்டிக் (74) கூறி (75) இருத்தி (76) நோக்கத்தாலே (77) குளிர்கொளுத்திச் (78) சிதார்நீக்கித் துவர (81) நல்கி (83) மகளிர் (85) மகிழை (84) வார்த்துத்தரத்தர (87) உண்டுபோக்கி (88) நின்றகாலைத் (89) தங்கி (90) நீக்கி (93) எழுந்து (95) ஏமாப்பச் (98) சொல்லிக்காட்டக் (100) கூவு கையினாலே (101) கழிப்பிய பின்றைத் (102) தண்டி (104) ஒற்றி (106) வேண்டேமென்கையினாலே (107) இரீஇத் (108) தூங்கக் (110) கழிப்பி (111) இரப்ப (112) அயின்றகாலத்திலே இருந்து (116) மழுங்கி (118) முனிந்து (119) சேறுமென (121) ஒருநாட் (119) கிளந்தனமாக (122) அகறிரோவெனச் சொல்லித் (123) தரத்தர யானும் (127) தவஞ்செய்மாக்கள் (91) அதன் பயமெய்திய அளவைமான (92) வேண்டுவ முகந்துகொண்டு (128) அரசவையிருந்த தோற்றம்போல (55) இன்மைதீர வந்தனெனென வினைமுடிக்க. 129 - 30. வென் வேல் உருவம் பல் தேர் இளையோன் சிறுவன் - வென்ற வேலினையுடைய அழகினையுடைய பலதேரினையுடைய இளஞ்சேட் சென்னியுடைய புதல்வன்,; வென்ற வேற்புதல்வன். 131. முருகன் சீற்றத்து உருகெழு குருசில் - முருகனது சீற்றம் போலும் சீற்றத்தையுடைய உட்குதல் பொருந்திய தலைவன்,; 132. தாய் வயிற்று இருந்து தாயம் எய்தி பிறந்து (137) - தாயுடைய வயிற்றிலேயிருந்து அரசவுரிமையைப் பெற்றுப் பிறந்து,; 1தான் பிறக்கின்ற காலத்துப் பிறவாதே நல்ல முகூர்த்தம் வருமளவும் தாயுடைய வயிற்றிலேயிருந்து பிறக்கையினாலே அரசவுரிமையைப் பெற்றுப் பிறந்தென்றார்.; 133. எய்யா தெவ்வர் ஏவல் கேட்ப - முன்பு தன்வலியறியாத பகைவர் பின்பு தன்வலியினையறிந்து ஏவின தொழிலைச் செய்ய,;
1கோச்செங்கட் சோழரும் பிறக்கின்ற காலத்துப் பிறவாது நல்ல முகூர்த்தம் வருமளவும் தாயினுடைய வயிற்றிலேயிருந்து பிறந்தாரென்றும், அக்காரணத்தால் அவர் சிவந்த கண்ணையுடையராயினாரென்றும் கூறுவர்; இத்தகையோரை, "கருவிலே திருவுடையவர்" என்பர்.
|